கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயிகள்
பெற்றுள்ள நீண்ட-நடுத்தரக் கால பயிர்க் கடன் வட்டியை மாநில அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை கர்நாடக கூட்டுறவுத்
துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவ பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது:
மாநிலத்தின் 136 வட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.
இதனால், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல்
விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதை அறிந்துள்ள மாநில அரசு, அபெக்ஸ் வங்கி, நிலவள வங்கி,
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் நீண்ட-நடுத்தர பயிர்க் கடனுக்கான வட்டியை
தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பயிர்க் கடனுக்கான வட்டித் தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு
மாநில அரசே வழங்கிவிடும். இதன்மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.290 கோடி செலவாகும். வறட்சி
நிலைத்துள்ளதால், கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் பயிர்க் கடன் வசூலிக்கக் கூடாது என்று
கூட்டுறவு வங்கிகளுக்கு மாநில அரசு வழிகாட்டுதல்
வழங்கியுள்ளது.
மேலும், பயிர்க் கடன் தவணைத் தொகை விவசாயிகள் ஓராண்டு
கழித்து செலுத்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2016, மார்ச் மாதம் வரை விவசாயிகள்
பயிர்க் கடன் தவணைத் தொகையைச் செலுத்தக் கட்டாயமில்லை.
இதனிடையே, பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய
வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருவதை தற்போதைக்கு ஏற்க முடியாது. நிகழ் நிதியாண்டில்
21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.9,800 கோடி பயிர்க் கடனை மாநில அரசு வழங்கியுள்ளது.
இதில் 95 சதக் கடன் தொகையை விவசாயிகள் திருப்பிச்
செலுத்தியுள்ளனர். இந்த விவசாயிகளுக்கு மறு பயிர்க் கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில்
விவசாயிகளுக்கு நீண்ட-நடுத்தரப் பயிர்க் கடனாக ரூ.2,300 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான
வட்டி ரூ.290 கோடியை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்
ரூ.5.62 லட்சம் கோடி வைப்புத்தொகை இருந்த போதும், 21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.23 ஆயிரம்
கோடி மட்டுமே பயிர்க் கடன் வழங்கியுள்ளன.
ஆனால், கூட்டுறவு வங்கிகளில் ரூ.22 ஆயிரம் கோடி மட்டுமே
வைப்புத்தொகை இருந்தும் ரூ.9,800 கோடி அளவுக்கு பயிர்க் கடன் தரப்பட்டுள்ளது.
வட்டியில்லா பயிர்க் கடன் திட்டத்துக்கு நபார்டு
வங்கி ஆண்டுதோறும் 50 சத நிதியை வழங்கி வந்தது. ஆனால், மத்தியில் உள்ள பாஜக அரசு இதை
40 சதமாகக் குறைத்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment