Thursday, October 1, 2015

நெல் கொள்முதல்: குவிண்டாலுக்கு ரூ.70 வரை ஊக்கத் தொகை

நிகழாண்டில் கரீஃப் பருவத்தில் நெல் கொள்முதலுக்காக மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலையுடன் கூடுதலாக ரூ.70 வரை ஊக்கத் தொகையாக அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதோடு, விளை பொருள்களுக்கு உரிய விலை வழங்கப்பட்டால்தான் விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும். இந்த அடிப்படையிலேயே, மத்திய அரசு நிர்ணயிக்கும் நெல் கொள்முதல் விலையுடன் கூடுதலாக ஊக்கத் தொகையை எனது தலைமையிலான அரசு ஒவ்வோர் ஆண்டும் அளித்து வருகிறது.
 நிகழாண்டில் கரீஃப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
 
 சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,450-ம், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,410 என்று நெல்லுக்கான ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
 கூடுதலாக ஊக்கத் தொகை: சாதாரண நெல்லுக்கு குவிண்டாலுக்கு மத்திய அரசு நிர்ணயித்த ரூ.1,410 உடன் கூடுதலாக, தமிழக அரசின் சார்பில் ரூ.50 அளிக்கப்படும். மேலும், சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசின் ரூ.1,450 என்ற விலையுடன் கூடுதலாக ரூ.70-ஐ மாநில அரசு அளிக்கும். இதனால், சாதாரண நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,460-ம், சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,520-ம் கிடைக்கும். நெல்லுக்கான இந்தப் புதிய கொள்முதல் விலை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
 சிறப்பு பொது விநியோகத் திட்டம்: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு பொது விநியோகத் திட்டம், அடுத்த ஆண்டு (2016) செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு பொது விநியோகத் திட்டத்துக்கான அரசு உத்தரவு புதன்கிழமையுடன் (செப்டம்பர் 30) முடிவடைய இருந்தது. இந்த நிலையில், அரசு உத்தரவை மேலும் ஓராண்டு காலத்துக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
 சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு-உளுத்தம் பருப்பு ஆகியன தலா ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் தொடர்ந்து வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கென தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.


No comments:

Post a Comment