Tuesday, October 6, 2015

பசுமைக்குடில் வெள்ளரியில் ஏழு மடங்கு லாபம்: உற்பத்தி அதிகரிக்க முடிவு


திண்டுக்கல்:ஒரு ஏக்கரில் ஏழு மடங்கு லாபம் தரும் பசுமைக்குடில் வெள்ளரிக்காய் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என, மாநில தோட்டக்கலைத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் அதிகளவு பசுமைக்குடில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமைகுடிலில் 'ஹில்டன்' 'மல்டிஸ்கான்' ரகங்கள் சாகுபடியாகின்றன. உள்ளூர் வெள்ளரியை விட இந்தரக வெள்ளரி ரகங்களில் விதைகள் அதிகளவில் இருக்காது.இதனால், பெரிய வியாபார விடுதிகளில் ' சாலட்' செய்வதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் வெளி மாநிலங்களுக்கும், கனடா, சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ஏக்கரில் உள்ளூர் வெள்ளரி 10 டன் சாகுபடியாகிறது. அதுவே, பசுமை குடிலில் வளர்க்கப்பட்ட 'ஹில்டன், மல்டிஸ்கான்' ரக வெள்ளரி ஏக்கருக்கு 80 டன் வரை காய்க்கும். விலை ரூ.20 முதல் ரூ.22 வரை விற்பனையாகிறது.
இருந்தாலும் பசுமைகுடில் அமைக்க பணம் லட்சங்களில் செலவாவதால் அதிக விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே மாநில தோட்டக்கலைத்துறை பசுமைக்குடில் அமைக்க சதுர மீட்டருக்கு ரூ.468.50ம், குடில்களின் அமைப்பைப் பொறுத்து கூடுதலாகவோ, குறைவாகவோ மானியம் வழங்க முன்வந்துள்ளது.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராமனாதன் கூறியதாவது: காய்கறி உற்பத்தியில் அதிகப்படியான லாபத்தை விவசாயிகள் பெற பசுமைகுடில் தொழில்நுட்பம் உதவுகிறது. தோட்டக்கலைத்துறை பசுமைகுடிலுக்கு மானியம் வழங்குகிறது. இந்த திட்டம் அனைத்து மாவட்ட தோட்டக்கலைத்துறைக்கும் விரிவாக்கப்பட உள்ளதால், விவசாயிகளுக்கு மானியம் அதிகளவில் கிடைக்கும். அதன் வாயிலாக உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது, என்றார்.


நீலகிரி முதலிடம்
காய்கறி மகத்துவ மைய உதவி இயக்குனர் சீனிவாசன்: தமிழகத்தில் தக்காளி, சம்பங்கி, கொய்மலர்கள், வெள்ளரி உள்ளிட்டவை அதிகளவில் பசுமைகுடிலில் சாகுபடியாகிறது. இதில், நீலகிரியில் உற்பத்தியாகும் காய்கறிகள், மலர்கள், பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. 
உற்பத்தியிலும் தமிழகத்தில் நீலகிரி முதலிடத்தை தக்க வைத்துள்ளது, என்றார்.


http://www.dinamalar.com/news_detail.asp?id=1358314

1 comment: