Friday, October 2, 2015

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை


ஈரோடு மாவட்டத்தில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பைகள் 40 மைக்ரானுக்கு குறைவாக தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. பிளாஸ்டிக் கழிவுகளை மறு பயன்பாட்டிற்கும், சிமெண்டு தொழிற்சாலை கலங்களில் எரிக்கவும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிளாஸ்டிக் பைகளிலும் மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதி எண், அதன் மைக்ரான் அளவு, எந்த வகை பிளாஸ்டிக் என்று குறிப்பிட வேண்டும். 

கடுமையான நடவடிக்கை

கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை இலவசமாக கொடுக்காமல் விலைக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட்டு விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். 

வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஈரோட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனங்களும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அனைத்து பிளாஸ்டிக் தொழிற்சாலைகளும் மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் அனுமதி பெறுதல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை 15 நாட்களில் செய்து முடிக்க வேண்டும். 

ரூ.1 லட்சம் அபராதம்

டாஸ்மாக் கடைகள், திருமண மண்டபங்கள், டீக்கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து வைத்து பிளாஸ்டிக் சங்கத்திடம் விற்பனை செய்ய வேண்டும். நிலம், நீர் மாசுபடும் வகையில் வெளியில் கொட்டக்கூடாது. 

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவரும் தெரிவித்து உள்ளார். எனவே பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பொதுமக்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து குப்பை சேகரிப்பவர்களிடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

கூட்டத்தில் சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள், மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

http://www.dailythanthi.com/News/Districts/Erode/2015/10/02221413/For-40-micron-Less-than-Plastic-items-If-you-use-heavy.vpf

No comments:

Post a Comment