Sunday, October 4, 2015

நெல் நடவு எந்திரம் வாங்க ரூ.2 லட்சம் மானியம் கலெக்டர் தகவல்



திருவண்ணாமலை,
நெல் நடவு எந்திரம் வாங்க ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று, கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் விவசாய பணிகளை கலெக்டர் ஞானசேகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். துரிஞ்சாபுரம் பகுதியில் நடந்த ஆய்வுக்கு பின்னர் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடி புதூரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்பட்ட நெல் பயிரையும், சோமாசிப்பாடி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை, தேசிய மூங்கில் இயக்கம் மூலமாக ரூ.15 ஆயிரம் மானியத்துடன் ரூ.30 ஆயிரம் மதிப்பில் மூங்கில் வளர்க்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார்.
சிறுநாத்தூர் ஊராட்சியில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடிலையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் ஞானசேகரன் கூறியதாவது:–
ரூ.2 லட்சம் மானியம்
வேளாண்மை துறையில் இரண்டாம் பசுமைப் புரட்சி மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க பல்வேறு திட்டங்களை முதல் –அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணி பார்வையிடப்பட்டது. இதுபுதிய தொழில் நுட்பம் ஆகும். இதன் மூலம் வேலை ஆட்கள் பற்றாக்குறையால் நடவு பணி பாதிக்கப்பட்ட நிலை மாறி உள்ளது. விவசாயிகளுக்கு அதிக மகசூலும் கிடைக்கும்.
எந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.3 ஆயிரம் அரசு மானியமும், நெல் நடவு எந்திரம் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மானியமும் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அக்கண்டராவ், தாசில்தார் பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment