Sunday, October 4, 2015

விளைச்சல் போட்டியில் முதலிடம் பெறுபவருக்கு... ரூ.15,000 பரிசு:



வாலாஜாபாத்:நெல் மற்றும் வேர்க்கடலை பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில் விளைச்சல் போட்டியை, வேளாண் துறை அறிவித்து உள்ளது. இந்த போட்டியில், மாவட்ட அளவில், அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு, முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம் என, வேளாண் அதிகாரி தெரிவித்து உள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, 1.48 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல்லையும்; 9,880 ஏக்கர் பரப்பில் வேர்க்கடலையையும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெற்பயிர் சாகுபடி மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு குறைவின் காரணமாக, விவசாயிகள் பயிரிடுவது பாதியாக குறைந்து விட்டது.இதை தவிர்க்கவும்; விவசாயிகளின் திறனை ஊக்குவிக்கும் விதமாகவும், ஆண்டுதோறும் அதிக விளைச்சல் போட்டியை வேளாண் துறை நடத்தியும்; முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் விவசாயிக்கு கனிசமான தொகையை வழங்கி ஊக்குவித்து வருகிறது.

நடப்பாண்டு சம்பா பருவத்தில் இருந்து, 31.3.16 வரையில், நெல் மற்றும் வேர்க்கடலை பயிரிடும் விவசாயிகளுக்கு, அதிக அளவில் மகசூல் பெற்று, மாவட்ட அளவில் முதல் இடம் பிடிக்கும் விவசாயிக்கு, 15 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்க உள்ளது. இரண்டாவதாக தேர்வு செய்யப்படுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாயும், என, மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை, மாவட்ட வேளாண் துறை வழங்க உள்ளது.

போட்டி தகுதிகள்
*                ஒரு விவசாயி எவ்வளவு ஏக்கர் நிலத்தில் வேண்டுமானாலும் பயிரிட்டு கொள்ளலாம்
*                அவசியம் நீர் பாசனம் வசதி இருக்க வேண்டும்
*                ஆண்டு முடிவதற்குள் எந்த பருவத்திலும் பயிர்  செய்து கொள்ளலாம்
*                சொந்த நிலமாக இருக்க வேண்டும்
*                குத்தகை நிலமாக இருந்தால், அதற்கு உரிய சான்று பெற்றிருக்க வேண்டும்.இதுகுறித்து, வேளாண் இணை இயக்குனர் சீதாராமன் கூறுகையில், 'பயிர் விளைச்சல் போட்டி மாநிலம் மற்றும் மாவட்டம் ஆகிய இரு பிரிவுகளாக நடைபெற உள்ளது' என்றார்.

மேலும் 'இந்த போட்டியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், மாநில அளவில் பங்கேற்க, 100 ரூபாயும்; மாவட்ட அளவில் 50 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் செலுத்தி, போட்டியில் பங்கு பெறலாம்' என்றார்.

No comments:

Post a Comment