Monday, August 22, 2016

இயற்கை உரத்தில் காய்கறி தோட்டம்: பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து அசத்தல்


பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், இயற்கை உரங்கள் மூலமாக, காய்கறிகளை விளைவித்து அதிகாரிகள் அசத்துகின்றனர்.

பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில், இரண்டு ஏக்கரில் உரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 15 வார்டுகளில் சேகரமாகும் மக்கும் குப்பை, இங்கு குவிக்கப்பட்டு, இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. பூங்காவின் ஒரு பகுதியில், ஒரு ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைந்துள்ளது. இதில், இயற்கை உரத்தைக் கொண்டு, வெண்டை, புடலை, வெள்ளரி, சின்ன வெங்காயம், மரவள்ளி மற்றும் மாதுளை ஆகிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இத்தோட்டத்து காய்கறிகளை வாங்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுகுறித்து, செயல் அலுவலர் சுப்ரமணியம் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உரப்பூங்காவில், இயற்கை உரத்தை பயன்படுத்தி, காய்கறிச் செடிகளை வளர்க்கிறோம். இதனால், மிகுந்த சுவையுடன், உடலுக்கு கூடுதல் ஆரோக்கியம் தரும் காய்கறிகள் கிடைக்கின்றன. மேலும், இயற்கை உரம் தேவைப்படுவோர், அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment