Friday, August 12, 2016

இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு மானியம்


வாடிப்பட்டி பகுதியில் இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
   இது குறித்து,  வாடிப்பட்டி வேளாண்மைக் கோட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் முருகேசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிப்பட்டி வேளாண்மைக் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் விரிவுபடுத்தப்பட்ட தொழில்நுட்பப்படி நாற்றங்கால் அமைப்பதற்கு 2-க்கு 1 அடி அளவுள்ள தட்டுகளில் கரம்பை மற்றும் தென்னை நார்கள் நிரப்ப வேண்டும். பின்னர், விதை நெல்லை அதில் பரப்பி தண்ணீர் தெளித்து, விதைநெல் முளையிட்ட பின்னர் 15 நாள் கழித்து நெல் நடவு இயந்திரம் மூலமாக 25-க்கு 25 செ.மீ. அளவு இடைவெளியில் நாற்று நடவு செய்யவேண்டும்.
  அதன்பின்னர், 10 நாள் முதல் 40 நாள்கள் வரை இயந்திரம் மூலம் களை எடுத்து வழக்கம்போல் நெல்லுக்கு இடும் ரசாயன உரங்களை இடவேண்டும். இத்தகைய முறையை கடைபிடித்தால், ஏக்கருக்கு 3,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிக்கு, ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment