எரிசக்தி மின்சாரத்துக்கு மாற்று, மொத்த தொகையில் 80%ம் மானியமாக வழங்கப்படுவதால் சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய பம்புகளை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் திருச்சி மாவட்ட விவசாயிகள்.
சுற்றுச்சூழல் மாசுபடாதவகையிலும், கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், மின் சேமிப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்துக்கு உதவும் வகையிலும் திருச்சி மாவட்டத்தில் 2013-14-ம் ஆண்டு முதல் சோலார் பம்பு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மானியங்கள் எவ்வளவு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழக அரசு 50%,மத்திய அரசு 30% மானியத்தை வழங்குகிறது. மீதமுள்ள மொத்த விலையில் 20% தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும். சோலார் பம்பு அமைக்க 200 ச.மீட்டர் அளவுக்கு நிழல்படாத திறந்தவெளி இடம் தேவைப்படும். ஆழ்துளைக் கிணறு பகுதியாக இருந்தால் 200 அடி ஆழத்துக்கு நீரும், திறந்தவெளிக் கிணறு என்றால் 100 அடி ஆழத்துக்கு நீர் வளமும் உள்ள இடங்களில் சோலார் பம்பு அமைத்துத் தருகிறோம்.
மாவட்டத்தில் இதுவரை 67 விவசாயிகளுக்கு ரூ. 2.30 கோடி மானியத்தில் சோலார் பம்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு 23 சோலார் பம்புகள் அமைத்துத் தர ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நிகழாண்டில் விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் 20% அதிகமாகும்.
இதுவரை 5 குதிரைத்திறன் சக்தி கொண்ட சோலார் பம்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் 7.5, 10 குதிரைத்திறன் கொண்ட பம்புகள் அமைத்துத் தரவும் விண்ணப்பங்களைப் பெற்று வருகிறோம்.
5 ஆண்டுகளுக்குப் பராமரிப்பு பணியை மோட்டார் பொருத்திய நிறுவனம் மேற்கொள்வதால் விவசாயிகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் பயணத்தில் தெரிவித்தார் ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி. திருச்சி மாவட்டம், தெற்கு மகிழம்பாடி கிராமத்தில் சோலார் பம்பு அமைத்து பாசனம் செய்து வரும் விவசாயி ப. பலராமகிருஷ்ணன் கூறியது: பொது நிர்வாகப் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்ற நான் அடிப்படையில் விவசாயி. ஏற்கெனவே மின் மோட்டார், டீசல் என்ஜின் மூலம் சாகுபடி மேற்கொண்டு வந்தாலும், பல நேரங்களில் விவசாயத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பாதிப்பைச் சந்தித்தேன். இந்நிலையில் 5 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்பு அமைத்துள்ள எனக்கு மின்சாரம்,டீசல் சிக்கனம் ஏற்பட்டது. தேவையானபோது தேவையான அளவு சூரியசக்தி மின்சாரம் பெற்று பாசனம் செய்து வருகிறேன்.
ரூ. 5.01 லட்சம் மதிப்புடைய சோலார் பம்பு அமைக்க, அரசு மானியம் ரூ. 3.84 லட்சம் வழங்கியது. மீதமுள்ள தொகையை நான் செலுத்தி இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறேன்.
சூரிய ஒளியைக்கொண்டு உற்பத்தியாகும் மின்சாரம் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் மின்சாரத்தைச் சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்தும் வகையில் பேட்டரி போன்ற வசதிகள் இருந்தால், இரவு நேரத்திலும் பயன்படுத்த முடியும் என்றார் பலராமகிருஷ்ணன். இந்தப் பயணத்தில் வேளாண் இணை இயக்குநர் இரா. சந்திரசேகரன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் முருகேசன், உதவிச் செயற்பொறியாளர் ராஜேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment