Wednesday, August 3, 2016

பயறு வகைகளில் லாபம் பெறும் முறை - விதைச்சான்று உதவி இயக்குனர் தகவல்


பயறு வகைப் பயிர்களில் லாபம் பெறும் முறை குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் லட்சுமி பிரபா தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் விபரம்: இம்மாவட்டத்தில் ஆடிப்
பட்டத்திற்கு ஏற்ற வம்பன் 5 மற்றும் 6 ரக உளுந்து பயிர்கள் 60 முதல் 65 நாட்கள் வளரக்கூடியவை.
இவற்றின் விதைபண்ணை அமைக்க, ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை விதைகளை அந்தந்த வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், உரிமம் பெற்ற விதைபண்ணை நிலையங்களிலும் பெறலாம். விதை வாங்கியதற்கான ரசீது மற்றும் சான்று அட்டைகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
விதைத்த 35 வது நாளில் விதைப்பண்ணையை அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ஏக்கருக்கு ரூ.25, வயல் ஆய்வுக்கட்டணம் ரூ.50, பகுப்பாய்வு கட்டணம் ரூ.30 மொத்தம் ரூ.105 செலுத்த வேண்டும்.
இப்பண்ணைகளில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகளை விதை நேர்த்தி செய்து, ஒரு கிலோவுக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் என்ற அளவில் பூஞ்சான விதை நேர்த்தி செய்ய வேண்டும். 24 மணி நேரம் கழித்து ஒரு ஏக்கருக்கு தேவையான 3 பாக்கெட் ரைசோபியம் பயறு மற்றும் 2 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிரியை ஆறிய வடி கஞ்சியுடன் கலந்து விதையுடன் சேர்த்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் விதை மூலம் பரவும் பூஞ்சான நோய்களை கட்டுப்படுத்த முடியும். மேலும், உயிர் உர நேர்த்தியால் காற்றில் உள்ள தழைச்சத்து பயிருக்கு கிடைத்த விதை பயிர் வளர்ச்சி நன்கு ஏற்படுகிறது. பயிர் பூக்கும் தருணத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசலை மாலையில் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் அதிகமாகி, அதிக காய்கள் பிடித்து மகசூல் அதிகரிக்கும்.
இப்படி பராமரிக்கப்படும் விதைப்பண்ணையில் ஏக்கருக்கு 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும், விவசாயிகளுக்கு மானியமும் கிடைத்து லாபம் இரட்டிப்பாக வாய்ப்பு
உள்ளது.

Source : Dinamalar

No comments:

Post a Comment