தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பகுதி பாசன விவசாயிகள் சம்பா பருவத்துக்கான நெல் ரகங்களைப் போதுமான அளவுக்கு வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசன பகுதிகளில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்களால் பாசன வசதி பெறும் டி.என்.பாளையம், கோபி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டாரங்களில் சம்பா பருவத்துக்கேற்ற நெல் ரகங்களான சிஓ50, சிஓ(ஆர்)48, சிஓ(ஆர்)49, ஏடிடி-38, ஏடிடி-39, ஏடிடி(ஆர்)-49, சிஓ-43 பவானி, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போன்றவைகளும், பின் சம்பா பருவத்துக்கான வெள்ளை பொன்னி ரகங்களான ஏடிடி-38, ஏடிடி-39, ஏடிடி(ஆர்)-46, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நெல் வீரிய ஒட்டு ரகங்களான சிஓ-50, ஏடிடி(ஆர்)-49, சிஓ-50 ஆகியவை உகந்த ரகங்களாக வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளன.
மேற்கண்ட நெல் ரகங்களில் சிஓ-50, ஏடிடி(ஆர்)-49, ஏடிடி-38, ஏடிடி-39 போன்ற நெல் ரகங்கள் அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் பருவத்துக்கு உகந்த விளைச்சல் தரும் என்எல்ஆர்-34449 நெல் ரகமும் இருப்பில் உள்ளது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம், உயிரியல் பூச்சிக்கொல்லிகளான சூடோமோனஸ், ட்ரைகோடெர்மா போன்றவையும் போதுமான அளவு இருப்பு உள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடவு செய்ய ஹெக்டேருக்கு மானியமாக ரூ. 5,000 வழங்கப்படுகிறது. அனைத்து நெல் வயல்களிலும் வரப்புப் பயிராக பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, தட்டை ஆகியவற்றை சாகுபடி செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
source : Dinamani
No comments:
Post a Comment