Thursday, August 18, 2016

நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ. 5,000 மானியம் பெறலாம்: வேளாண் துறை அறிவிப்பு


நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ. 5,000 மானியம் பெறலாம் என்று வேளாண் இணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பாசனத்தில் டி.என்.பாளையம், கோபி, ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி வட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்ய நெல் விதைகள் போதுமான அளவு அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பருவத்துக்கு உகந்த அதிக மகசூல் தரும் என்எல்ஆர் 34449 என்ற நெல் ரக விதைகளும் இருப்பில் உள்ளது. மேலும், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம், உயிரியியல் பூஞ்சை கொல்லிகளான சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா போன்றவைகளும் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் இயந்திர நடவு மேற்கொள்ள மேம்படுத்தப்பட்ட ஓர் ஹெக்டேருக்கு மானியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. அனைத்து நெல் வயல்களிலும் வரப்பு பயிராக பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, தட்டை போன்றவற்றை சாகுபடி செய்யலாம். இதற்காக விவசாயிகளுக்கு அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment