திருத்தணியை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி, எல்லம்பள்ளியில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:
விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் சேர்ந்து, உறுப்பினர் அடையாள அட்டையை பெற்று ஈமச்சடங்கு, விபத்து, கல்வி உதவித்தொகைகளை பெற்று பயனடைய வேண்டும்.
பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூ. 8,000, பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் வாரிசுதாரர்கள் தொழில்நுட்பக் கல்வி, கலை, மருத்துவக் கல்வி பயில ரூ.1,250 முதல் ரூ. 6,750 வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.
மேலும், கால்நடை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விபத்துகள், இயற்கை இடர்பாடுகளால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு நிதி உதவி பெறலாம். 5 மாடுகள் வரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கலாம். இதர பிரிவைச் சார்ந்த விவசாயிகள் ரூ.250 செலுத்தினால், அரசு தரப்பில் மானியமாக ரூ.250 வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.150 செலுத்தினால் அரசு மானியமாக ரூ.350 செலுத்தும் என்றார் ஆட்சியர். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு.முகமது இக்பால், ஊராட்சி மன்றத் தலைவர் பானு சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment