மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இது குறித்து, வாடிப்பட்டி வேளாண்மைக் கோட்டம், வேளாண்மை உதவி இயக்குநர் முருகேசன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிப்பட்டி, சோழவந்தான் மற்றும் நாச்சிகுளம் கிராமங்களில் வேளாண்மை விற்பனை மையங்களில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் தற்போது நெல் விதைகள் கோ 51, எஎஸ்டி 16 மற்றும் என்எல்ஆர் 34449 ஆகியன போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நெல் விதைகளுக்கு கிலோவுக்கு ரூ.10 மானியம் வழங்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் இயந்திர மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், மண் வளத்தைப் பெருக்கும் பொருட்டு, தக்கைப்பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் பின் ஏற்பு மானியமாக வழங்கப்படுகிறது.
பவர் டில்லர் வாங்க சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ. 75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
என்எம்ஓஓபி திட்டத்தின் கீழ், மானாவாரி நிலங்களில் எண்ணெய் வித்து மரப் பயிர்களான வேம்பு, இலுப்பை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
எனவே, இத்திட்டங்களின் மூலம் மானியங்களை பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு அதில் தெரிவித்துள்ளார்.
Source : Dinamani
No comments:
Post a Comment