Monday, August 8, 2016

'யானைகள் காப்போம்'

சுற்றுச்சூழல் சமன்பாட்டின் பாதுகாவலனாக யானைகள் இருப்பதால், அவற்றின் பாதுகாப்பு பல்லுயிரிகளின் பாதுகாப்புக்கு முக்கியமானதாக உள்ளது. ஆகவே, நாம் யானைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். 
 19-ஆம் நூற்றாண்டில் 50 சதவீதமாக இருந்த வனங்களின் பரப்பளவைத் தற்போது 21 சதவீதமாக நாம் குறைத்துவிட்டோம். நகரமயமாதல், தொழில் வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம் என பல்வேறு காரணிகள் வனப்பகுதி குறைய காரணமாக இருந்துள்ளன. 
 வனப் பகுதியின் பரப்பு குறைந்துவிட்டதால் உணவுப் பற்றாக்குறை, இடம் பெயர போதிய இடம் இல்லாதது, வழித்தட ஆக்கிரமிப்பு, வழித்தடம் துண்டுபடுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்ட யானைகளின் எண்ணிக்கையும் தற்போது குறைந்துவிட்டது.
 யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினம். அவை காட்டில் பல்வேறு உயிரினங்கள் வாழ காரணமாகின்றன. 
 யானைகள் தொலைதூரம் நடப்பவை. நாளொன்றுக்கு சராசரியாக 25 சதுர கி.மீ. தூரம் பரப்புடைய வனத்தை நடந்து கடப்பவை. யானைகள் நடக்கும் இடமெல்லாம் வனத்தில் ஒரு பாதை உருவாகிறது. இன்று நாம் வனப் பகுதியில் பயன்படுத்தும் பாதைகள் முன்பு யானைகள் ஏற்படுத்திய பாதைகள்தாம். 
 காட்டில் யானைகள் நடப்பதால் உருவாகும் எல்லா வழித்தடங்களும் ஏதாவதொரு நீர்நிலையை நோக்கியே செல்லும். கோடைக்காலத்தில் நீரின்றித் தவிக்கும் மற்ற வன விலங்குகள் யானைப் பாதை வழியே சென்று நீர் இருக்கும் இடத்தைதைக் கண்டறிகின்றன. 
 இந்தியாவில் பெரும்பாலான காடுகள் இலையுதிர் காடுகளாகவும், முள்புதர் காடுகளாகவும் உள்ளன. இவற்றில்தான் அரியவகை உயிரினங்கள் காணப்படுகின்றன.
 ஒரு முள்புதர்க் காட்டில் புலி போன்ற உயிரினங்கள் வாழ வேண்டுமானால், அக்காட்டில் யானைகள் இருக்க வேண்டும். புலி போன்ற ஊன் உண்ணிகளுக்கு உணவாகும் மான் போன்ற தாவர உண்ணிகள் முள்புதர்க் காட்டில் வாழ வேண்டுமானால், அவை தடையின்றி நடமாட பாதைகள் வேண்டும். யானைகள் நடமாடினால் மட்டுமே காட்டில் பாதைகள் உருவாகும்.
 நன்கு வளர்ந்த யானைகள் 3,500 கிலோ முதல் 4,500 கிலோ வரை எடையுள்ளவை. யானைகளுக்கு அதிக உணவும், தண்ணீரும் தேவைப்படுகின்றன. உணவுக்காக யானைகள் மரத்தின் கிளைகளை உடைத்துப் பயன்படுத்துகின்றன. கோடைக் காலங்களில் உணவு கிடைக்காமல் திரியும் மான் உள்ளிட்ட தாவர உண்ணிகள் யானைகள் உடைத்துப்போட்ட மரக் கிளைகளை உண்டுவாழ்கின்றன.
 யானைகள் நாளொன்றுக்கு சராசரியாக பதினைந்து முறை சாணமிடுகின்றன. இந்தச் சாணம் பல்வேறு வகைகளில் பிற உயிரினங்களுக்குப் பயன்படுகிறது. யானை சாணத்தில் உள்ள தாது உப்புகள் வண்ணத்துப்பூச்சிகளின் இனப் பெருக்கத்துக்குப் பயன்படுகின்றன. 
 யானைகள் சாப்பிட்ட உணவு செரித்து சாணமாக வெளியேற 46 முதல் 72 மணிநேரம் ஆகிறது. ஓரிடத்தில் சாப்பிட்ட உணவு சாணமாக வெளியேறுவதற்குள் அங்கிருந்து 50 கி.மீ. தூரம் யானைகள் நடந்துவிடுகின்றன. அவை சாப்பிட்ட உணவு 40 சதவீதம் மட்டுமே செரிமானமாகிறது. மீதமுள்ள உணவில் தாவரத்தின் பல்வேறு விதைகள் வெளியேறுகின்றன. 
 ஓரிடத்தில் யானைகள் உணவாக உட்கொண்ட தாவரத்தின் விதைகள் வேறிடத்தில் முளைத்து மாறுபட்ட மரபியல் தன்மையை உருவாக்குகின்றன. சிதைந்த சாணம் கரையான்களுக்கு உணவாகிறது. இறுதியாக சாணம் உரமாகி வனத்தை வளப்படுத்துகிறது.
 தாவர உண்ணிகளுக்கு சில பருவ காலங்களில் தாது உப்பு குறைந்து காணப்படும். யானைகள் இயற்கை உப்பு மண்ணைக் கண்டறிந்து பயன்படுத்தும் தன்மையுடைவை. அவை பயன்படுத்திய உப்பு மண்ணை பிற தாவர உண்ணிகளும் பயன்படுத்துகின்றன. 
 ஆகவே, வனப் பகுதி வளமாக இருக்க வனப் பகுதியில் யானை வாழவேண்டும். இதனைப் புரிந்துகொண்டு யானைகளை வனப் பகுதியில் வாழ தொந்தரவு செய்யாமலும், அவற்றின் வாழிடத்தை ஆக்கிரமிப்பு செய்யாமலும் நாம் இருக்க வேண்டும்.
 யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற முயற்சியை செய்யவேண்டும். யானைப் பாதுகாப்பு என்பது ஓர் உயிரினம் சார்ந்தது மட்டுமல்ல. ஒட்டுமொத்த சூழலியல் சமன்பாட்டை சார்ந்தது. 
 யானைகள் அழிந்தால் வனப் பகுதி அழியும். வனப் பகுதி அழிந்தால் பிற வன உயிரினங்களும் அழிந்துபோகும். எனவே, சுற்றுச்சூழல் சமன்பாட்டைப் பாதுகாக்கும் யானைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
 

Source : Dinamani

No comments:

Post a Comment