தாமிரவருணி பாசனத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி பாசனம் செய்யுமாறு வேளாண்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பண்டை காலத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் உயர் மகசூல் பெற்று வந்தனர். அத்தகைய உயர்ந்த மகசூலைப் பெறும் வகையில் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி அதிக மகசூல் பெறலாம்.
தரமான விதை: நெல் சாகுபடியில் சான்று பெற்ற உயர் விளைச்சல் மற்றும் வீரிய ஒட்டு இரக விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு மூன்று கிலோ வீதம் விதை போதுமானது. இதனால் விதைக்கான செலவு வெகுவாகக் குறைகிறது.
ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு சென்ட் அதாவது 40 சதுர மீட்டர் பரப்பளவில் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். இயந்திர நடவு மேற்கொள்ள, பாய்களிலோ, டிரேக்களிலோ நாற்றுகளை விட வேண்டும்.
நாற்றின் வயது: 10 முதல் 14 நாள் வயதுடைய இளம் நாற்றுக்களை, நன்கு சமன் செய்த வயலில் நடவு செய்தல் வேண்டும். ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் ஒற்றைக் குத்து முறையில் மட்டுமே நடவு செய்ய வேண்டும்.
சதுர நடவு: வரிசைக்கு வரிசை முக்கால் அடி அதாவது (22.5 செ.மீ), குத்துக்குக் குத்து முக்கால் அடி (22.5 செ.மீ), என்ற இடைவெளியில் சதுர நடவு மேற்கொள்ள வேண்டும். சதுர நடவுக்கு அடையாளம் இட மார்க்கர் கருவியைப் பயன்படுத்த வேண்டும்.
வேளாண் திட்டம்: நடவு இயந்திரம் மூலம் நெல் நடவு மேற்கொள்ளலாம். தமிழக அரசு விவசாயிகளிடையே இயந்திர நடவு முறையை ஊக்குவிக்கும் வகையில், நடவுக்குப் பிந்தைய மானியமாக ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம், அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் மானியமாக வழங்குகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் இயந்திர நடவு மேற்கொண்டு, அரசு வழங்கும் மானிய உதவியை வேளாண் துறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நீர்ப்பாசனம்: நீர் மறைய நீர் கட்டு, நிறைய வரும் நெல்கட்டு என்ற அனுபவ மொழிக்கு ஏற்ப ஒரு விரற்கடை அளவுக்கு, அதாவது 2.5 செ. மீ அளவுக்கு மட்டுமே நீர் நிறுத்தி, நீர் மறைய நீர் கட்ட வேண்டும். நடவு செய்த பின் 10 தினங்களுக்கு ஒரு முறை கோனோவீடர் (அல்லது) விசை களைக் கருவியைக்கொண்டு நான்கு முறை குறுக்கும் நெடுக்குமாக ஓட்டி, களையினை மண்ணுக்குள் மடக்கி உரமாக்க வேண்டும்.
வேண்டுகோள்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப இலை வண்ண அட்டையை உபயோகித்து, இலை நிறத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, நிறச்செறிவு 4 இருக்குமாறும், தேவைக்கேற்ப தழைச்சத்து இட்டு உர நிர்வாகம் செய்திட வேண்டும். நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி உயர் மகசூல் மூலம் உன்னத இலாபமும் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment