Thursday, July 28, 2016

சிறுநீர்பை கோளாறுகளை போக்கும் நெறிஞ்சில்


3
புரோஸ்டெட் சுரப்பியில் ஏற்படும் வீக்கத்தை போக்க சிறுநெறிஞ்சில் மருந்தாகிறது. இந்த சீசனில் தாராளமாக கிடைக்கும் சிறுநெறிஞ்சில் பூக்கள், மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் நெறிஞ்சில் பொடி கிடைக்கும். 50 வயதை கடந்த ஆண்களுக்கு புரோஸ்டெட் கிளான்ட் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. புராஸ்டெட் சுரப்பி இன உற்பத்திக்கு முக்கியமானது.

உயிரணுக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. சிறுநீர் பைக்கு கீழே உள்ள புரோஸ்டெட்டில் வீக்கம் ஏற்பட்டால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படும். இப்பிரச்னைக்கு சிறுநெறிஞ்சில் அற்புதமான மருந்தாகிறது.ஒரு கைப்பிடி அளவுக்கு சிறுநெறிஞ்சில் எடுக்கவும். இதில், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர வீக்கம் குறையும். காலையில் ஒருமுறை குடித்துவர பயன்தரும். சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது.

கழற்சிக்காயை பயன்படுத்தி புரோஸ்டெட் சுரப்பி வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை வெயிலில் காயவைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பொடி செய்யவும். இதேபோல் கெட்டி பெருங்காயம், மிளகை வறுத்து பொடி செய்து கொள்ளவும். 4 ஸ்பூன் கழற்சிக்காய் பொடி எடுத்தால், ஒரு ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் பெருங்காய பொடி அளவில் கலந்து வைத்துக்கொண்டால் இதை மாதம் முழுக்க பயன்படுத்தலாம்.

இந்த கலவையில் அரை ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டுவர வீக்கம் குறையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரை டம்ளர் மோரில் சேர்த்து கலந்து குடிக்கலாம். தேவையில்லாத வீக்கம் எங்கிருந்தாலும் அதை கரைக்க கூடியதாக கழற்சிக்காய் விளங்குகிறது. வீக்கத்தை கரைக்க கூடிய தன்மை உடையது. நோய் எதிர்ப்புசக்தி கொண்டது.

வீக்கம் இருந்தால் அடிவயிற்றில் பூசக்கூடிய மருந்து தயாரிக்கலாம். 50 மில்லி விளக்கெண்ணெயில், 2 ஸ்பூன் கழற்சிக்காய் பொடி சேர்த்து தைலமாக காய்ச்சவும். நிறம் மாறும்போது இறக்கி வைக்கவும். இதை தூங்கும்போது அடிவயிற்றில் தடவினால் வீக்கம் குறையும். உள் உறுப்புகளின் அழற்சி சரியாகும்.

பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் சத்து குறைபாடுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து காலை வேளையில் சாப்பிட்டுவர எலும்பு வளர்ச்சி, கால்சியம் சத்து கிடைக்கும். முருங்கை, அகத்திகீரை சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும். கால்சியம் குறைபாடு நீங்கும். 

Source : Dinakaran

No comments:

Post a Comment