சாகுபடி பரப்பளவு குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைக்கும் நிலை உருவாகி இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய வேளாண் அமைச்சகத்தின் 3-ஆவது முன்கூட்டிய அறிவிப்பின்படி, 2015-16ஆம் ஆண்டில் நிலக்கடலை 44.60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 68.86 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. குஜராத், ஆந்திரம், தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நிலக்கடலை உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும்.
தமிழகத்தில் நிலக்கடலை 2.17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 5.43 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நிலக்கடலை அதிகமாக விளைவிக்கப்படுகின்றன.
கடந்த 2014-15ஆம் ஆண்டில் இந்தியா 7.88 லட்சம் டன்கள் நிலக்கடலையை ஏற்றுமதி செய்த நிலையில், 2015-16ஆம் ஆண்டில் அது 5.36 லட்சம் டன்களாக குறைந்துள்ளது. இந்திய எண்ணெய்வித்து ஏற்றுமதி மேம்பாட்டு மையம், வியட்நாமில் இருந்து இறக்குமதியாகும் நிலக்கடலைக்கு விதித்த தடையாலும், உள்நாட்டு சந்தையில் நிலக்கடலையின் விலை உயர்வாலும் 2015-16ஆம் ஆண்டில் நிலக்கடலை ஏற்றுமதி 32 சதவீகிதம் குறைந்துள்ளது.
மேலும், இந்தியாவில் நிலக்கடலை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது. நாட்டின் நிலக்கடலை உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் குஜராத் மாநிலத்தில் பருவமழை பொய்த்ததால் நிலக்கடலைச் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. அதேபோல், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் நிலக்கடலை சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது.
சாதகமற்ற பருவநிலையால் ஏற்பட்ட நிலக்கடலையின் உற்பத்தி குறைவு 15 சதவீதமாகும். இதுவும் விலை ஏற்றத்துக்கு காரணமாகும். அதேநேரம் கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது கடலை எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. எனவே, நிலக்கடலைக்கு இந்த ஆண்டில் நல்ல விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 13 ஆண்டுகளாக திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய நிலக்கடலையின் விலையை ஆய்வு செய்து, சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வு முடிவின் அடிப்படையில், நிலக்கடலையின் பண்ணை விலை வரும் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது குறித்த விவரங்களுக்கு உள்நாட்டு, ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தையோ, எண்ணெய்வித்துகள் துறையையோ தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்கள் 0422-2431405, 2450812.
Soirce : Dinamani
No comments:
Post a Comment