Wednesday, July 27, 2016

கத்திரிக்கா... குண்டு கத்தரிக்கா...


t

சாகுபடிக்கு ஏற்ற இனங்களாக கோ 1, கோ 2, எம்.டி.யு., 1, பி.கே.எம்., 1, பி.எல்.ஆர்., 1, கே.கே.எம்., 1, அண்ணாமலை ஈ.கோ.பி.எச்., 1 (வீரிய ஒட்டு ரகம்), அர்கா நவனீத், அர்காகேசவ், அர்காநிரி, அர்காசிரீஸ், அர்கா ஆனந்த் போன்றவை. 
நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தன. டிசம்பர் - ஜனவரி மற்றும் மே - ஜூன் மாதம் விதைப்பதற்கு உகந்த மாதங்கள். எக்டேருக்கு 400 கிராம் விதை தேவை. எக்டேருக்கு 100 சதுர மீட்டர் நாற்றங்கால் அளவு இருக்க வேண்டும்.

விதையும், விதைப்பும்: ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் நேர்த்தி செய்ய வேண்டும். 
400 கிராம் விதைகளுக்கு 40 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் சிறிது அரிசிக் கஞ்சி சேர்த்து நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, உயரமான பாத்திகளில் 10 செ.மீ., இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளை பரவலாக துாவ வேண்டும். விதைத்த பின் மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.

உரப் பாசனம்: கலப்பு ரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 200:150:100 கி.கி., ஆகும். 
இதில் 75 சதவிகிதம் மணிச்சத்தை (112.5 கி.கி., மணிச்சத்து 703 கி.கி., சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். 
மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:37.5.100 கி.கி., உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவை பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும். 
நீர் நிர்வாகம், களை கட்டுப்பாடு மற்றும் களை நிர்வாகம், வளர்ச்சி ஊக்கிகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி நடவு செய்த 55 முதல் 60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்கள் பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். 
காய்களை 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.எக்டேருக்கு 150 முதல் 160 நாட்களில் 25 முதல் 30 டன்கள், வீரிய ஒட்டு ரகங்களில் 45 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.
- பூபதி, இணை இயக்குனர்
தோட்டக்கலைத்துறை, மதுரை

Source : Dinamalar

No comments:

Post a Comment