அதிக வேளாண் சாகுபடி தொழில்நுட்பத்துக்கு செல்லிடப்பேசி செயலியை (கிஸான் ஆஃப் சுவிதா) பயன்படுத்தி பயனடையலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நீலகிரி மாவட்ட வேளாண் வணிகத் துணை இயக்குநர் வீரமணி தெரிவித்துள்ளதாவது:
இந்திய விவசாயிகளின் நலன் கருதிப் பயிர் சாகுபடி தொடர்பான நவீன தொழில்நுட்பக் கருத்துகளைத் தெரிந்து கொள்ள செல்லிடப்பேசி செயலி (கிஸான் சுவிதா) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஆன்டிராய்ட் வகை செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலான இந்த செயலியை தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலமாகத் தமிழில் மொழி மாற்றம் செய்து விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த செயலி மூலமாக அடுத்த 5 நாள்களுக்கான பருவநிலை மாற்றம், புகைப்பட விளக்கத்துடன் பயிர்ப் பாதுகாப்பு மேலாண்மை முறைகள், உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் உள்ள வேளாண் விளைபொருள்களின் தினசரிச் சந்தை விலை நிலவரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் விதை, உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணுடன் கூடிய முகவரி போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயர் அவர்களது செல்லிடப்பேசி எண்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் தாங்கள் இருக்குமிடத்திலிருந்தே தேசிய அளவில் மட்டுமின்றி, மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பருவநிலை, சந்தை நிலவரம், பயிர்ப் பாதுகாப்பு, வேளாண் ஆலோசனை, விற்பனையாளர்களின் முகவரி போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment