Sunday, July 10, 2016

நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய வலியுறுத்தல்


நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய வேளாண் துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
 வேளாண் துறை மூலம் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நாற்று நடவு முறையில் துவரை பயிர் சாகுபடி செய்ய நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந் நாற்றங்காலை வியாழக்கிழமை பார்வையிட்டு, வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாஸ்கரன், வேளாண் உதவி இயக்குநர் (நல்லம்பள்ளி) அமுதவள்ளி ஆகியோர் விவசாயிகளுக்கு, துவரை நாற்று நடவுமுறை தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்துப் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டது. இதில் நல்லம்பள்ளி வட்டாரத்தில் மட்டும் 2,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. ஜூன், ஜூலை மாதங்கள் துவரை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
 துவரை பயிர் நாற்று நடவு முறையில் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் திரம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாணைக்கொல்லி மருந்தைக் கலந்து, 24 மணி நேரம் வைத்திருந்து பின் ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதைநேர்த்தி செய்து 200 காஜ் தடிமன் பாலித்தீன் பைகளில் மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து பைகளை நிரப்பி விதைகளை 1 செ.மீ. ஆழத்தில் விதைக்க வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க 4 துளைகள் இடவேண்டும். விதைப்பு செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை சூரிய ஒளி, நிழல் உள்ள இடத்தில் வைத்து, நீர் தெளித்து 30 முதல் 40 நாள்கள் பராமரித்து வயலில் நடவு செய்யலாம்.
 துவரையில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப் பயறு, தட்டைப் பயிறு மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை விதைப்பு செய்து, பின் 5 (அ) 6 அடிக்கு ஒரு உழவு சால் ஏற்படுத்தி துவரை நடவு செய்தால் ஊடுபயிர் மூலம் உபரி வருமானம் பெறலாம். பயிரின் முக்கிய வளர்ச்சி நிலைகளான நடவு, பூக்கும் பருவம், காய்பிடிக்கும் பருவம் ஆகிய பருவங்களில், தவறாமல் 3 முதல் 4 நீர்ப்பாசனம் அளிக்க வேண்டும். மண் அணைப்பதால் களை கட்டுப்பாடும் ஏதுவாகிறது.
 பயிர்களுக்கு சரியான அளவு இடைவெளி மற்றும் போதிய அளவு நீர்ப்பாசனம் அளிப்பதால் நிலம், காற்று, ஈரப்பதம் மற்றும் பயிர் சத்துக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் பயிருக்கு கிடைக்கும். இதனால் பயிர் மகசூல் அதிகரிக்கிறது. பக்கவாட்டு கிளைகள் அதிகளவில் உருவாவதன் மூலம் அதிக காய்கள் உற்பத்தியாகி மகசூல் அதிகரிக்கிறது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி துவரை சாகுபடி செய்ய வேண்டும் என்றனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment