அனக்காவூர் வட்டாரப் பகுதியில் நெற்பயிரில் மீண்டும் புகையான் நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த வேளாண் துறை சார்பில் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து அனக்காவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது நெற்பயிர் புகையான் நோய், அதாவது பிபிஹெச் என்கிற பூச்சியின் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு முன்னரே விவசாயிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், எவ்வித பாதிப்புமில்லாமல் நெல் சாகுபடியில் மகசூல் ஈட்டலாம்.
புகையான் நோயின் அறிகுறிகள்: பிபிஹெச் பூச்சி தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து, தீய்ந்த நிலையில் காட்சியளிக்கும். முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாக காணப்படும். மேலும், பயிர்கள் சாய்ந்து விடும். நெற்பயிர்கள் தீய்ந்த அறிகுறியிலிருந்து அதில் இருக்கும் கரும்புகைப்பூசனத்தின் மூலமாக வேறுபட்டுக் காணப்படும்.
பூச்சியின் அறிகுறிகள்: இலைகளில் 2-12 தொகுதிகளாக முட்டைகள் இடப்பட்டிருக்கும். வெள்ளையான ஒளி ஊடுருவுகின்ற மெலிந்த உருளை வடிவிலும், வளைவாகவும் முட்டைகள் 2 வரிசைகளில் இடப்பட்டிருக்கும். புதிதாக வெளிவந்த இளம் உயிரிகள் பருத்தி போன்ற வெண்மையான நிறத்திலும், வளர்ந்த பூச்சிகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
அந்துப்பூச்சி முதிர்ச்சியடைந்த தத்துப்பூச்சி மஞ்சளான பழுப்பு முதல் கரும்பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும். அதன் இறகு நிறமில்லாமல் மக்கிய மஞ்சள் நிறமாக காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை: தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமான நீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும். விளக்குப் பொறி அமைத்து புகையானை கவர்ந்து அழிக்கலாம்.
வயலில் தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 15 லிட்டர் ஹெக்டேர் மற்றும் இலுப்பை எண்ணெய் 30 லிட்டர் ஹெக்டேர், வேப்பங்கொட்டைச் சாறு 25 கிலோ ஹெக்டேர் ஆகியவை இட வேண்டும்.
ரசாயன மருந்து முறை: ஏக்கருக்கு இமிடாகுளோபிரிட் 40-50 எம்எல், ஏக்கருக்கு பிப்ரோனில் 400-600 எம்எல், ஏக்கருக்கு பிப்ரோப்சின் 320 எம்எல், ஏக்கருக்கு பாஸ்போமிடான் 800 எம்எல் போன்ற பல மருந்துகளை இட்டு புகையான் தாக்குதலில் இருந்து நெல்பயிர்களை பாதுகாத்து பயனடையலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment