கறவை மாடுகளை விவசாயிகள் வளர்ப்பது பால் உற்பத்திக்காகத்தான். மடி இல்லையேல் மாடு இல்லை என்பர். பால் உற்பத்தியின் முக்கிய அங்கமான மடியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் விவசாயிகள் உடன் கவனிக்க வேண்டும். கிராமங்களில் கறவை மாடு வளர்ப்போர் மடி நோயினை ஆரம்ப கால கட்டத்தில் சிகிச்சையளிக்காமல் விட்டு விடுகின்றனர். மாட்டிற்கு திருஷ்டி பட்டு விட்டது என நினைத்து சிகிச்சை அளிக்காமல் விட்டு விடுவர். குறைந்தது மூன்று நாளாவது இச்செயலை மாடு வளர்ப்போர் செய்யும் போது மடி வீக்க நோயின் தாக்கம் அதிகரித்து முற்றிய நிலையை அடைகிறது.
காலம் கடந்த சிகிச்சை: பின் கால்நடை மருத்துவரின் உதவியை நாடுகின்றனர். ஒரு சில நேரங்களின் மருந்துகளின் வீரியத்துக்கு கட்டுப்படாமல் கிருமிகளின் எண்ணிக்கை பெருகி பஞ்சு போன்ற திசுக்களை மாற்றி பாறாங்கல் போன்று திசுக்களை கொண்ட மடியாக மாற்றி விடுகிறது. இதன் விளைவு அந்த ஈத்தில் பால் உற்பத்தியை கணிசமான அளவில் விவசாயிகள் இழந்து விடுகின்றனர்.
மடிவீக்க நோய் முழுவதுமாக பாக்டீரியா கிருமிகளினால் உண்டாகிறது. பாலில் பாக்டீரியா கிருமிகள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலை அபரிதமாக இருப்பதால் எண்ணிக்கையில் பன்மடங்காக நாளுக்கு நாள் பாக்டீரியா கிருமிகள் பெருகுகின்றன. அவைகளின் வளர்ச்சி மாற்றத்தால் ஏற்படும் கழிவுகள் பால் மடியின் பஞ்சு போன்ற மிருது தன்மையை மாற்றி பாறாங்கல் போல் ஆக்குகின்றன.
தென்படாத மடி வீக்கம்: ஆரம்ப காலத்தில் மடி வீக்க நோயினால் மடி வீக்கம் தென்படாது. மாறாக சுரக்கும் பால் தண்ணீர் போன்றோ, திரிதிரியாகவோ சுரந்தால் அது மடிவீக்க நோயின் ஆரம்ப அறிகுறியாகும். ஸ்டெர்ப்டோகாக்கை, ஸ்டெபிலோகாக்கை, சூடோமோனாஸ், கொரினிபாக்டீரியம், கோலிபார்ம் போன்ற பாக்டீரியா இனங்கள் மடியை பாழாக்குகின்றன. இது மடி நோய் ஏற்பட முதல் காரணமாகும். அதிகளவில் நீண்டு தொங்கும் இயற்கையாக அமைந்த மடி உள்ள கறவை மாடுகள் மடி நோய் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகின்றன. நீண்டு தொங்கும் மடியினால் தரையில் உராய்வு ஏற்பட்டு சிறு கீறல்கள் மடியில் உண்டாகும். இக்கீறல்கள் மூலம் பாக்டீரியா கிருமிகள் மடியினுள் உட்புகும்.
மருத்துவ சிகிச்சை அவசியம்: சாதாரணமாக பால் சுரக்கும் ஆரம்ப நாட்களிலும் பால் சுரப்பின் கடைசி நாட்களிலும் மடி வியாதி தோன்றலாம். சுரக்கின்ற பாலை முழுவதும் கறக்காமல் மடியில் விட்டு வைத்தால் இந்நோய் வர வாய்ப்புண்டு. மடி நோயால் விவசாயிகளின் அன்றாட வாழ்வில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதால் இந்நோய் கறவை மாடுகளுக்கு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
கறவை மாடுகளின் மடி பாகங்களை தேய்த்து கழுவி தினமும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். காற்றோட்டமான வெளிச்சமான கொட்டில்களில் கறவை மாடுகளை கட்டி பராமரிப்பது நல்லது. பால் கறக்க சுத்தமான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பால் சுரப்பு கறவை மாடுகளில் குறைய நேரிட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை கொண்டு உரிய காரணத்தை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். பின் அதற்கு தக்க மருத்துவ
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
-வி.ராஜேந்திரன்,
(ஓய்வு)இணை இயக்குனர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
94864 6904
4
Source : Dinamalar
No comments:
Post a Comment