Tuesday, July 12, 2016

தரமான பயறு விதை உற்பத்தி செய்ய வேண்டுமா? வழிகாட்டுகிறது வேளாண்துறை

தரமான பயறு வகை விதை உற்பத்தி செய்வதற்கு வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். 
குறைந்த நீர்த்தேவை உள்ள குறுகிய கால விவசாயத்திற்கு பயறு வகை விவசாயம் ஏற்றது. துவரை, உளுந்து, தட்டை மற்றும் பாசிப்பயறு போன்றவை பயறு வகை விவசாயத்தை சேர்ந்தவை. பயறு வகை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களது நிலத்தை நன்கு புழுதியாகும் வரை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவின்போது 1 ஹெக்டேருக்கு 12.5 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். வேளாண்துறையினரால் சான்றளிக்கப்பட்ட ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். விதை அளவு மற்றும் இடைவெளிகள் வேளாண்துறையினர் அறிவுறுத்தியபடி இருக்க வேண்டும்.

விதை நேர்த்தி செய்ய 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 2 கிராம் கார்பன்டைசிம் என்ற அளவில் கலக்க வேண்டும். கலந்த 24 மணி நேரத்திற்கு பிறகு 1 ஹெக்டேருக்கு தேவையான 3 பொட்டலம் ரைசோபியத்தை நன்றாக கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும். விதையை கடினப்படுத்துவதால் முளைப்புத்திறன் மற்றும் வீறியத்தன்மை அதிகரிக்கின்றது. வறட்சி, அதிக வெப்பம் மற்றும் உவர் மண்ணின் தீமையைத் தாங்கும் திறன் அதிகரிக்கின்றது. பயிர்களில் நீர் சேமிக்கும் தன்மை அதிகரிக்கின்றது. எனவே, விதையை கடினப்படுத்தி, விதை முலாம் பூச வேண்டும். 

ெஹக்டேருக்கு 5 கிலோ பயறு வகைகளுக்கான நுண்சத்தினை அடியுரமாக இட வேண்டும். 1 ஹெக்டேருக்கு தேவையான விதையுடன் 3 பொட்டலம் ரைசோபியம், 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஹெக்டேருக்கு 10 பொட்டலம் ரைசோபியம் (பயறு) மற்றும் 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா இட வேண்டும். மானாவாரியில் ஹெக்டேருக்கு 12.5:25:12-.5 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் இட வேண்டும். இறவையில் ஹெக்டேருக்கு 50:25:25 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் இட வேண்டும். ஹெக்டேருக்கு 110 கிலோ ஜிப்சம் இடுவதால் காய்கள் திரட்சியாக இருக்கும். பென்டிமெதிலின் களைக்கொல்லி ஹெக்டேருக்கு 2 லிட்டர் வீதம் 900 லிட்டர் தண்ணீரில் கரைத்து விதைத்த 3 நாட்களுக்குள் ஈரம் உள்ளபோது தெளிக்க வேண்டும். 

விதைத்த 5ம் நாள் முளைக்காத இடங்களில் ஊறவைத்த விதையை இடைநிறைவு செய்ய வேண்டும். வேளாண்துறையினர் வழிகாட்டுதலுடன்படி இவை வழியாக உரமிடுதல் மற்றும் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும். பூச்சிநோய் தாக்குதல், நுண்ணுட்டச்சத்து பற்றாக்குறை, கடுமையான வறட்சி, அதிகமான ஈரப்பதம் போன்ற காரணங்களால் பயறு வகைகளில் பூக்கள் உதிர்கின்றன. இதனால் மகசூல் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. 

இதனை பயிர் ஊக்கியான நாப்தலின் அசிடிக் ஆசிட் கொண்டு கட்டுப்படுத்தலாம். பயிர் ஊக்கியினை தெளிக்க சுத்தமான தண்ணீரை உபயோகிக்க வேண்டும். வளர்ச்சிநிலை, பூக்கும் நிலை மற்றும் காய்பிடிக்கும் நிலைகளில் நீர் பாய்ச்சுதல் செய்ய வேண்டும். பயறு வகைகளில் இளம்பருவம், வளரும் பருவம் மற்றும் பூக்கும் பருவங்களில் ஏற்படும் நோய்களையும், சாம்பல் நோய் மற்றும் துருநோய்களுக்கான மருந்துகளை வேளாண்துறையினர் வழிகாட்டுதலுடன் கலந்து தெளிக்க வேண்டும். 80% காய்கள் நன்கு முற்றயவுடன் அறுவடை செய்ய வேண்டும். பிரித்த விதைகளை நன்கு காயவைக்க வேண்டும்.

1 கிலோ விதைக்கு 10 மில்லி என்ற அளவில் ஏதாவது 1 தாவர எண்ணெய்யுடன் கலந்து சேமித்திட வேண்டும். இவ்வாறு செய்வதால் வண்டுகள் பயிரின் மீது முட்டையிடுவதை குறைக்கலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதியில் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Source : Dinakaran

No comments:

Post a Comment