t
திண்டுக்கல் - மதுரை ரோட்டிலுள்ளது கோட்டைப்பட்டி. இங்கு கோழிப்பண்ணை, நிழல்வலைக்கூட நாற்றங்கால் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து மாதம் ரூ.30 ஆயிரம் வருவாய் ஈட்டுகிறார், விவசாயி சரவணன்.
'அசில்' கோழிகள்: இவர் 50 சென்ட் நிலத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் கோழிப் பண்ணை 'செட்' அமைத்துள்ளார். ஆந்திராவில் கிடைக்கும் நாட்டுக் கோழி குஞ்சுகள் (அசில் ரகம்) தலா ரூ.30க்கு 100 குஞ்சுகளை வாங்கி, பண்ணையில் சுத்தமான மணல், சுண்ணாம்பு பூச்சு, சுகாதாரமான காற்றோட்டத்தில் கோழிகளை 90 நாள் வளர்க்கிறார். ஒரு அசில் ரக கோழிக்கு 90 நாட்களுக்கு 2.5 கிலோ தீவனம் தேவை. நுாறு கிலோ தீவனத்திற்கு, '50 கிலோ மக்காச்சோளம், 10 கிலோ கம்பு, 10 கிலோ தவிடு, 5 கிலோ கடலை புண்ணாக்கு அல்லது சோள புண்ணாக்கு தேவை. இயந்திர அரவை மூலம் கோழி உண்ணும் அளவில் அரிசியை பதமாக உடைக்க வேண்டும்.
இத்துடன் உப்புச்சுவையற்ற கடல் கழிவு மீன்கள் 5 கிலோவை கலக்க வேண்டும். அது ஈரப்பதமாக இருப்பதற்காக, ஒரு கிலோ 'ரைஸ் பிராண்ட் ஆயில்' மற்றும் 'மினரல் மிக்சர்' ஒரு கிலோ (ரூ.50) வாங்கி கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். கோழிகளுக்கு காலை, மாலை தீவனம் வழங்க வேண்டும். சுகாதாரமான குடிநீரை வழங்க, வாரத்தின் இரு நாள் சிறிதளவு மஞ்சள் பொடி கலந்து கொடுக்க வேண்டும். இதுமாதிரி பராமரித்தால் 90 நாளில்
ஒவ்வொரு கோழியும் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை இருக்கும்.
மாதம் ரூ.30 ஆயிரம்
சரவணன் கூறியதாவது: தீவனம் ரூ.75, கொள்முதல் ரூ.30, நோய் தாக்குதலின் போது தரப்படும் 'டானிக்' ரூ.15 ஆக ஒரு கோழிக்கு ரூ.115 வளர்ப்புச் செலவாகிறது. வளர்ந்த பிறகு ஒரு கிலோ ரூ.190 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யலாம். இதனால் 90 நாளில் 100 கோழிகள் விற்பனையில் ரூ.11 ஆயிரத்து 500 லாபம் கிடைக்கும். கோழி வளர்ப்புடன் மானிய உதவியுடன் பசுமைக்குடிலும் அமைத்துள்ளார். வீரியரக தக்காளி விதை 10 கிராம் ரூ.350, மிளகாய் 10 கிராம் ரூ.450க்கும், கத்தரி விதை 10 கிராம் ரூ.250க்கும் வாங்கினேன். குழித்தட்டில் தென்னமர மஞ்சு கொண்டு நிரப்பி, அதில் விதைகளை நட்டு எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொண்டேன்.
விதை, விதைப்பு, கூலி, பராமரிப்பு என மாதம் ரூ.2700 செலவானது. அதிக வெப்பம் தாக்காமல் இருக்க பூவாளியால் நீர் பாய்ச்சினேன்.
30 நாட்களில் ஒரு லட்சம் நாற்றுக்கள் விற்பனைக்கு தயாரானது. 35 நாள் கத்தரி நாற்று ஒன்று 60 காசு, 25 நாள் தக்காளி நாற்று ஒன்று 45 காசு, 42 நாள் மிளகாய் நாற்று ஒன்று 65 காசுக்கு விற்றேன். இதன் மூலம் சந்தை நிலவரப்படி ரூ.7 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணை மூலம் மாதம் ரூ.18,500 கிடைக்கிறது, என்றார்.
தொடர்புக்கு 97915 - 00783.
-வீ.ஜெ.சுரேஷ், திண்டுக்கல்
.
Source : Dinamalar
No comments:
Post a Comment