Tuesday, July 19, 2016

உடல் எரிச்சலை போக்கும் வேப்பம் பூ



நரம்பு மண்டலங்களில் ஏற்படும் அழற்சி மற்றும் பாதிப்பால் கை, கால், பாதங்களில் எரிச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், அதிகம் மது குடிப்பவர்களுக்கும் பொதுவாக உடல் எரிச்சல் ஏற்படும். வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் வேப்பம் பூ, அரை ஸ்பூன் சீரகம் எடுக்கவும். இதில், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். உடல் எரிச்சல் இருக்கும்போது, இதை வடிக்கட்டி குடித்தால் பிரச்னை சரியாகும்.

வாரம் ஒருமுறை சர்க்கரை நோயாளிகள் இந்த தேனீரை குடித்துவர உடல் எரிச்சல் குணமாகும். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். கல்லீரலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வேப்பம் பூவை எடுத்துக் கொண்டால் வயிற்றில் பூச்சிகள் சேராது. அதிக பித்தம் காரணமாக உடல் எரிச்சல் ஏற்படும். ஈரல் பாதிக்கப்பட்டு உஷ்ணம் அதிகமாவதாலும் உடல் எரிச்சல் ஏற்படுகிறது.

மருதாணியை கொண்டு உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். பித்தத்தை குறைக்கும் தன்மை மருதாணியில் உள்ளது. மாதம் ஒருமுறையாவது மருதாணியை கையில் வைக்கும்போது உடல் எரிச்சல் சரியாகும். அழகுக்காக பயன்படுத்தும் மருதாணியை கைகளில் வைக்கும்போது நுண்கிருமிகளை போக்குகிறது.  பாகற்காய் இலையை கொண்டு உடல் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

பாகற்காய் இலையை பசையாக அரைத்து எடுக்கவும். உள்ளங்கை, கால்களில் எரிச்சல் இருக்கும்போது, மருதாணி இலை பசையை அரை மணி வைத்திருக்கும்போது எரிச்சல் சரியாகும். உடல் எரிச்சலுக்கான தைலம் தயாரிக்கும் முறை: 50 கிராம் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் 20 கிராம் வெட்டி வேரை சேர்த்து காய்ச்சவும். ஸ்டவை ஆப் செய்தபின் 20 கிராம் அளவுக்கு கடுக்காய் பொடி சேர்க்கவும். இந்த தைலத்தை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இதை குளியல் தைலமாக பயன்படுத்தலாம்.

இதனால் உடலில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் சரியாகும். வெட்டி வேர் கண் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டது. பார்வையை கூர்மையாக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். சிறார்கள் கூட தற்போது கண்ணாடி போடும் நிலையுள்ளது. இதற்கு பாதாம் பருப்பு மருந்தாகிறது. தினமும் 4 பாதாம் பருப்பை இளம் வயதினருக்கு கொடுத்துவர அவர்களுக்கு பார்வை கூர்மையாகிறது. பாதாமில் உன்னதமான மருத்துவ வேதிப்பொருட்கள் உள்ளன. சரிவிகித உணவாக விளங்கும் பாதாமை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். 

Source : Dinakaran

No comments:

Post a Comment