Sunday, July 10, 2016

விவசாயம் சார்ந்த தகவல்களை செல்லிடப்பேசியில் பெறும் திட்டம்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான கிசான் சுவிதா அலைபேசி செயலித் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்த 18 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களும், 6 உழவர் சந்தைகளும் இயங்கி வருகிறது. இதில் நெல், பருத்தி, வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பல வகை விவசாய உற்பத்திப் பொருள்களை விற்பதற்கும், சேமித்து வைப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
 இதன் தொடர்ச்சியாக விவசாயம் மேற்கொள்ள ஏற்ற காலநிலை, பருவ நிலை மாற்றம், விளைபொருள் சந்தை நிலவரம், இடுபொருள் இருப்பு நிலவரம், பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள மத்திய, மாநில அரசுகள் கிசான் சுவிதா அலைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது.
 இதன் மூலம் விவசாயிகள் மேற்கண்ட தகவல்களை தங்கள் செல்லிடப்பேசி மூலம் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், தங்களுக்குத் தேவையான தகவல்களைக் குறிப்பிட்டுத் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியும். உள்ளூர், வட்டாரச் சந்தை நிலவரங்களையும் இதில் பெறலாம். 
 ஏற்றச் சூழலில் விவசாயம் செய்வதற்கும், உரிய நேரத்தில் விளை பொருள்களை விற்பனை செய்வதற்கும், இருப்பு வைத்து விற்பதற்கும் இது பயனுள்ளதாக அமையும்.
 விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கிசான் சுவிதா மென்பொருள் செயலியினை, தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, தகவல்களைக் கேட்டு பயன்பெறுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Source : dinamani

No comments:

Post a Comment