Friday, July 1, 2016

குறுவை பருவத்திற்கேற்ற புதிய ரகங்கள்: வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை

குறுவை பருவத்துக்கேற்ற புதிய நெல் ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் இராஜா.ரமேஷ் மற்றும் முனைவர் ரெ.பாஸ்கரன் ஆகியோர் விவசாயிகளுக்கு பரிந்துரை வழங்கியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
கோயம்புத்தூர் 51:
2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் 105 முதல் 110 நாள்கள் வயதுடையது. தூர் பிடித்து சாயாத தன்மை கொண்டது.
ஹெக்டருக்கு 6,623 கிலோ விளைச்சல் அளிக்கவல்லது.  மத்திய சன்ன ரக வெள்ளை நிற அரிசி. குலைநோய்,  பச்சை தத்துப்பூச்சி மற்றும் புகையான் பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்புத் திறன்  கொண்டது.
எம்டியு 6:
2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த ரகம் 110-115 நாள்களைக் கொண்ட குறுகிய கால ரகமாகும்.   எம்டியு 5 மற்றும் ஏசிம் இணைந்து உருவாக்கப்பட்ட ரகம்.  சராசரி மகசூலாக இறவையில் ஹெக்டருக்கு 6118 கிலோ. ஏடிடீ 43-ஐ விட 9.8 சதம் மற்றும் ஏடிடீ 45-ஐ விட 10.2 சதம் அதிக  மகசூல் தரவல்லது. இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், பச்சை தத்துப்பூச்சி மற்றும் வெண்முதுகுப் பூச்சி  ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புத் திறன் உடையது. இந்த ரகத்தை தமிழ்நாட்டில் சொர்ணாவாரி, கார், குறுவை, நவரை ஆகிய பருவங்களிலும் ஏனைய குறுகிய கால ரகங்கள் சாகுபடி செய்யும் பகுதிகளிலும் பயிரிடலாம்.
நீண்ட சன்ன அரிசியை உடைய இந்த ரகம் சிறந்த சமையல் பண்புகளை உடையது. பச்சரிசியாக பொங்கல், அவல் மற்றும் பொரி தயாரிப்பதற்கு மிகவும் ஏற்றது.
திருப்பதிசாரம் 5 (டிபிஎஸ்5):
2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரகம். ஒரு ஹெக்டருக்கு சராசரியாக 6,300 கிலோ விளைச்சல் தரவல்லது. அம்பை 16 ரகத்தை விட 14 சதம் அதிக விளைச்சல் தரவல்லது.அம்பை 16 மற்றும் ஏடிடீ 37 இணைத்து உருவாக்கப்பட்டது.  118 நாள்கள் வயதுடையது.  தண்டு துளைப்பான், இலை சுருட்டுப் புழு மற்றும் புகையான் பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்புத் திறன்  கொண்டது.  நல்ல அரவைத்திறன் கொண்ட  இந்த ரகத்தின் அரிசி குறுகிய தடிமனானது. அரிசியின் அமைலோஸ்  இடைப்பட்ட அளவில் இருப்பதால் சமைக்க உகந்தது.   இவ்வாறு அந்த பரிந்துரையில் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

source : Dinamani

No comments:

Post a Comment