Friday, July 1, 2016

தக்காளி இலைச்சுருள் நச்சுயிரியை அழிக்க யோசனை

தக்காளிப் பயிரைத் தாக்கும் இலைச்சுருள் நச்சுயிரியை அழிப்பது தொடர்பாக தொலைபேசியில் விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை கிராம வள மையத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி- நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, கேபி -நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர். கணேசமூர்த்தி தலைமை வகித்து பேசியது:
கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் தக்காளி இலைச்சுருள் நச்சுயிரி நோய் கத்தரிப் பயிரைப் பாதித்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் 80 முதல் 100 சதவிகிதம் வரை பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நோய் கரூர் மாவட்டத்தில் தற்போது காணப்பட்டாலும் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் விவசாயிகள் தக்காளி நோய் தாக்குதலில் இருந்து காத்து கொள்ளலாம் என்றார்.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பயிர் மருத்துவர்கள் ஜி. சுதாகர், பி. செந்தில்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கமளித்தனர்.  கத்தரிச் செடிகள் வளர்ச்சி குன்றி குட்டையாகத் தோன்றுதல், இலைகள் சிறிதாகவும் மேல் நோக்கி சுருண்டும் காணப்படுதல், இலைகள், பூக்கள் பச்சையமற்ற,மஞ்சள் நிறமாகக் காணப்படுதல் ஆகியவை நோயின் அறிகுறிகளாகும்.
இந்த நச்சுயிரியானது வெள்ளை ஈக்கள் மூலமாக ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குப் பரவுகிறது. எனவே,வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தி இந்த நச்சுயிரியைக் கட்டுப்படுத்தலாம். மேலும் எதிர்ப்புத் திறன் கொண்ட அர்கா அனன்யா ரகங்களைப் பயிரிடுதல்,வயலைச் சுற்றி தானியப் பயிர்களைப் பயிரிடுதல் மூலமும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினர்.ட மேலும் இந்நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு வேளாண் விஞ்ஞானிகளை 99422-11044,  72999-35542 - ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 65 விவசாயிகள் பங்கேற்று பேசினர். ஏற்பாடுகளை, ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப அலுவலர் எஸ். ஏசுதாஸ் செய்திருந்தார்.

Source : Dinamani

No comments:

Post a Comment