Sunday, July 10, 2016

"விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கருவிகள் பெறலாம்'

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2016 ஆம் ஆண்டை சர்வதேச பயறு வகைகள் ஆண்டாக 68 ஆவது சர்வதேச சபை அறிவித்துள்ளது. அதன்படி, நிகழாண்டில் பயறு உற்பத்தியை அதிகரித்திட பயறுவகைப் பயிர்களுக்காக தூத்துக்குடி மாவட்ட வேளாண் துறைக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.66 கோடி நிதி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உயர் விளைச்சல் தரக்கூடிய விதைகள் கிலோவுக்கு ரூ.25 மானியத்திலும், விதைகளை உற்பத்தி செய்யும் விதைப் பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக கிலோவுக்கு ரூ.25, மேலும்,ஹெக்டருக்கு ரூ.5,000 மானியத்தில் முன்னேறிய தொழில்நுட்ப செயல்விளக்கத் திடல்கள் அமைக்கவும், நிலத்தை உழுது பண்படுத்திட டிராக்டர்கள் வழங்கவும் ரூ.1,25,000 மானியம், ரூ. 35,000 மானியத்தில் சுழற்கலப்பைகளும் வழங்கப்பட உள்ளன.
 மானாவாரிப் பகுதிகளில் உள்ள ஒரு சில கிணறுகளில் இருந்து பயிருக்கு பாய்ச்சப்படும் நீரின் விரயத்தை தவிர்த்திட நீர் கடத்தும் குழாய்கள் ஹெக்டருக்கு ரூ.15,000 மானியத்திலும், விதைக்கும் கருவி கொண்டு வரிசை விதைப்பு செய்யும் விவசாயிகளை ஊக்குவித்திட ஹெக்டருக்கு ரூ.1000 மானியமும், ஹெக்டருக்கு ரூ.650 வீதம் டி.ஏ.பி தெளிப்பு மற்றும் பயறு அதிசயம் தெளிப்பு மானியம் வழங்கப்பட உள்ளது.
 மேலும்,  பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லி, நுண்ணூட்ட உரம் ஆகியவை எக்டருக்கு ரூ.500 மானியத்திலும், ஜிப்சம் எக்டருக்கு ரூ.750 மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. இவை அனைத்தின் பலனாக நிகழாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பயறு உற்பத்தியை அதிகரித்திட வேளாண்மைத்துறை திட்டமிட்டுள்ளது.
 எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலமாக நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து பயறுவகைப் பயிர்களின் பரப்பை அதிகரித்து அதிக விளைச்சல் பெற சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment