Thursday, October 8, 2015

பொள்ளாச்சி பகுதியில் கொடி ரக தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்



பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பகுதியில் கொடி ரக தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தக்காளி சாகுபடி
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 38.80 ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டு உள்ளது. இதில் அதிகமாக கொடி ரக தக்காளி சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. தக்காளியில் கொடி ரகத்தை பொருத்த வரை நாற்று தயாரித்து நடவு செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தி குழித்தட்டு முறையில் நாற்று தயாரிக்கலாம்.
நாற்றுப்பருவம் 25 முதல் 30 நாட்கள் ஆகும். பின்னர் நாற்றை பாத்திக்கு பாத்தி 3 அடி இடைவெளியும், செடிக்கு செடி 2 அடியிலும் நடவு செய்ய வேண்டும். நடவுக்கு பின்னர் தினமும் ஒரு மணி நேரம் நீரில் பாசனம் செய்ய வேண்டும்.
மழைக்கு சேதமடையாது
நடவு செய்த 30–வது நாளில் சவுக்கு அல்லது தைல மரக்குச்சிகளை 6 அடி இடைவெளியில் நட்டு வைத்து தக்காளி கொடியை சணல் கயிறு கொண்டு கட்டி விட வேண்டும். நடவு செய்த 30 மற்றும் 60 நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.
நடவு செய்ததில் இருந்து 70–வது நாளில் காய்க்க தொடங்கும். அதை தொடர்ந்து 150 நாட்கள் வரை தக்காளி அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 45 முதல் 50 டன் வரை மகசூல் எடுக்க முடியும். கொடி ரக தக்காளி சாகுபடி செய்வதால், மழைக்காலங்களில் தக்காளி செடி தரையில் விழுந்து, பழங்கள் சேதமடையாது. எனவே இந்த கொடி ரக தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த தகவலை பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சகாப்தீன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment