Thursday, October 8, 2015

கரும்பு உற்பத்தியை பெருக்க நவீன தொழில்நுட்பம்: துணைவேந்தர்


நவீன தொழில்நுட்பம் மூலம் தமிழகத்தில் கரும்பு உற்பத்தியை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர்(பொறுப்பு)சி.ஆர்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.

மதுரை பசுமலையில் தமிழ்நாடு கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி யாளர்கள் 46 ஆவது கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:
 கரும்பு உற்பத்தியில் உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. மொத்தம் உற்பத்தியாகும் கரும்பில் 65-70 சதவீதம் வரை சர்க்கரை உற்பத்திக்காக பயன்படுகிறது. 20-25 சதவீதம் வெள்ளம் தயாரிப்பதற்காகவும், 7-10 சதவீதம் விதைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பயிரிடப்படும் மொத்த பயிர்பரப்பில் 5.9 சதவீதம் கரும்பு பயிரிடப்படுகிறது. இதனை அறுவடை செய்ய நவீன இயந்திரங்களை கண்டறிந்து வருகிறோம். மேலும் உற்பத்தியைப் பெருக்க நவீன தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் நுண்ணீர் பாசன முறையில் குறைந்த அளவு நீரில் பயிர்செய்யப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவும் அதிக வருவாயும் கிடைக்கிறது என்றார்.
 மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் விழா மலரை வெளியிட்டு பேசியது:
சர்க்கரைத் துறையானது அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடியது. இந்த துறை வளர்ச்சி அடைந்தால் விவசாயிகள் மற்றும் ஆலை தொழிலாளர்கள் பயனடைவார்கள். இது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். புதிய ஆராய்ச்சி மூலம் கரும்பு உற்பத்தி செலவை குறைத்து விவசாயிகள் மற்றும் ஆலை அதிபர்களுக்கு லாபகரமான தொழிலாக கரும்பு உற்பத்தி தொழிலை மாற்றவேண்டும். விவசாயிகளின் வருமானத்தை பாதிக்ககூடியது களைகள். இவைகள் மூலம் சுமார் 20 சதவீதம் வரை உற்பத்தி பாதிக்கப்படும். இவற்றை கட்டுப்படுத்தவும் புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்றார்
நிகழ்ச்சியில் தேசிய கூட்டுறவு சர்க்கரை மேலாண்மை(மதுரை)இயக்குநர் எம்.சங்கரநாராயணன் வரவேற்றார். கோவை கரும்பு ஆராய்ச்சி நிலைய இயக்குநர் பக்சிராம் திட்டவிளக்க உரையாற்றினார். வேளாண்மைத்துறை இயக்குநர் மு.ராஜேந்திரன், சர்க்கரைதுறை கூடுதல் இயக்குநர் .சங்கரலிங்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயக்குநர் மா.மகேஸ்வரன், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் வி.ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கரும்பு அபிவிருத்தி அலுவலர் ஆர். மணிமாறன் நன்றி கூறினார்.

http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/10/09/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-/article3070907.ece

No comments:

Post a Comment