இயற்கை வேளாண் விவசாயத்திற்கு மானியம் வழங்கப்படுவதாக, வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள பிதிரெட்டி கிராமத்தில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மை விவசாயிகள் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் வேளாண்மை அலுவலர் மனோகரன், இயற்கை பூச்சி விரட்டி குறித்தும், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய முனைவர் தண்டபாணி, இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். பயிற்சிக்கு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சபாநடேசன், தலைமை வகித்து பேசியதாவது: பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களை இயற்கை வேளாண் முறைக்கு மாற்ற, ஏக்கருக்கு, ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் பசுந்தாள் உர விதைகள் மற்றும் நாற்றுகள் வாங்க, 500 மானியமும், இயற்கை இடுபொருளான பஞ்சகாவ்யா உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் வாங்க, ரூ.1,500 மானியமும், பசுந்தாள் உர கன்றுகள் நட, ரூ.2,000 மானியமும், தாவரங்களில் இருந்து பூச்சி விரட்டி தயார் செய்ய, ஆயிரம் ரூபாய் மானியமும், திரவ உயிர் உரம் வாங்க, ரூ.500 மானியமும் வழங்கப்படுகிறது. அதேபோல், பாஸ்பேட் மிகுந்த உரம் வாங்க, ஆயிரம் ரூபாய் மானியமும், மண்புழு உர உற்பத்தி தொட்டி அமைக்க, ரூ.5,000 மானியமும் வழங்கப்படுகிறது. மானிய தொகைகள் அனைத்தும், விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
source : Dinamalar
No comments:
Post a Comment