விலை உயரும்போது மட்டும் மஞ்சள் வரத்து அதிகரிக்கிறது. வரத்து அதிகரித்ததும் உடனடியாக விலை சரிவு ஏற்பட்டு, மீண்டும் சீரான விலையை அடைகிறது,'' என இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில், பெருந்துறை மற்றும் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, நான்கு இடங்களில் அதிக அளவில் மஞ்சள் விற்பனை நடக்கிறது. சனி, ஞாயிறு தவிர தினமும், பல லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் வர்த்தகம் நடக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக, 7,500 முதல், 9,500 ரூபாய்க்குள் மஞ்சள் விலை போகிறது.
இதுபற்றி, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர் தெய்வசிகாமணி கூறியதாவது: உற்பத்தி மற்றும் தேவையும் சமமாக உள்ளதால், விலையும் சீரான நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரிய லாபமும், பெரிய நஷ்டமும் அடைவதில்லை. மஞ்சள் விலை, குவிண்டால், 9,000 ரூபாய்க்கு மேல் விற்கும்போது, இருப்பு வைத்துள்ள மஞ்சளை விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உடன், 9,500 ரூபாயை அடைகிறது. நல்ல விலை கிடைப்பதால் வரத்து அதிகரித்ததும், மீண்டும் விலை சரிகிறது. இதனால், நேற்று முன்தினம் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், குவிண்டால், விரலி - 7,389 முதல், 9,009, கிழங்கு - 7,211 முதல், 8,469 ரூபாய்க்கும், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி, 7,354 முதல், 9,100 ரூபாயும், கிழங்கு - 7,299 முதல், 8,410 ரூபாய்க்கும், ஈரோடு சொசைட்டியில் விரலி, 7,711 முதல், 9,011 ரூபாய்க்கும், கிழங்கு - 7,421 ணுமுதல், 8,399 ரூபாய்க்கும் விலை போனது. மகராஷ்டிரா, நிஜாமாபாத், சாங்ளி மற்றும் தமிழகத்திலும் ஒரே விலை நீடிப்பதால், பிற மாநில வியாபாரிகள் இங்கு வந்து மஞ்சளை எடுத்து செல்வதில்லை. மொத்த தேவைக்கு மட்டும் வாங்கி செல்கின்றனர்.
கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால், அதிக அளவில் தமிழகத்தில் மஞ்சள் சாகுபடியாகி, இருப்பில் அதிகமாக மஞ்சள் உள்ளது. தற்போது நடவுப்பணி நடந்து வருகிறது. ஜூலை இறுதி வரை, நடவு நடக்கும். பருவமழை ஏமாற்றினாலும், நிலத்தடி நீர் கைகொடுக்கிறது. பருவமழை பெய்து, அதிகமாக மஞ்சள் வரத்தானால் விலை குறையும். அல்லது, இன்னும் ஒரு மாதத்துக்குப்பின் மஞ்சள் விலை உயர வாய்ப்புள்ளது. பிற மாநிலங்களில் தொடர் வறட்சி நிலவுவதால், மஞ்சள் சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், தமிழக மஞ்சள் விவசாயிகளுக்கு வரும் மாதங்களில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment