Monday, November 2, 2015

தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்



சென்னை, 

அரபிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை தலைகாட்டுகிறது. அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

லட்சத்தீவு கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி வடக்கு நோக்கி நகர்ந்து, கர்நாடகம் அருகே உள்ள அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. 

இன்று கனமழை

இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனத்த மழை பெய்யக்கூடும். 

சென்னை நகரத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றின் திசை மாறுவதாலும், மேல் அடுக்கு சுழற்சி அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளதாலும் 2 நாட்களுக்கு பிறகு மழை குறையும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இரணியலில் 13 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்துள்ள மழை விவரம் வருமாறு:-

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டரும், கோயம்புத்தூர்(தெற்கு), மதுராந்தகம் 10 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், பெரியநாயக்கன்பாளையம் 8 செ.மீ., மயிலாடி 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

நீலகிரி கேத்தி, கோத்தகிரி, நாங்குநேரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அரக்கோணம், உத்திரமேரூர், சென்னை விமான நிலையம் 6 செ.மீ., நாகர்கோவில், குடவாசல், மரக்காணம் 5 செ.மீ., குளச்சல், தக்கலை, திருச்செந்தூர், ராதாபுரம் 4 செ.மீ., சீர்காழி, பள்ளிப்பட்டு, சிவகாசி, சோளிங்கர் 3 செ.மீ., செங்குன்றம், பொள்ளாச்சி, அரிமளம், சாத்தான்குளம் ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

http://www.dailythanthi.com/News/State/2015/11/03092352/IMD-Forecasts-rain-today-in-chennai-and-pudhucherry.vpf

No comments:

Post a Comment