பொள்ளாச்சி: உணவுக்கும், சருமத்தை காப்பதற்கும் பயன்படும் பாசிப்பயறு சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. வறட்சியான, மானாவாரி நிலங்களில் வளரக்கூடியது பாசிப்பயறு, இது பச்சைப்
பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில், 90 சதவீதம் சாகுபடியாகிறது. மழையை நம்பிய மண்ணில்
தனிப்பயிராகவும், ஊடு பயிராகவும் இதன் சாகுபடி உள்ளது. இதில், புரதச்சத்து, மாவுப்பொருள், குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் கொண்டுள்ளது.
விவசாயிகள் அதிகபட்சமாக, அரை ஏக்கர் பரப்பளவில் தான் இதை பயிரிட்டு வருகின்றனர். உணவாக மட்டுமன்றி, மருத்துவத்துக்கும் அதிகமாக பயன்படுகிறது. முளைகட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக பயன்படுத்தப்படுகிறது. கொழுக்கட்டை, மோதகம், பொங்கல், பாயசம், கஞ்சி ஆகியன தயாரிக்க பாசிப்பயறு பயன்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் நாளன்று, சர்க்கரை பொங்கல் தயாரிக்கும்போது, அரிசி, வெல்லத்துடன் பாசி பயறும் சேர்க்கப்படுகிறது.
துவரம்பருப்புக்கு பதிலாக சில நேரங்களில் பாசிப்பருப்பு சாம்பார் தயாரிக்கப்படுகிறது. அரிசியும், சிறு பயறும் சேர்த்து கஞ்சியாக சமைக்கப்படுகிறது. இதுதவிர, முகத்தில் உள்ள அழுக்கை முற்றிலும் அகற்றி, முகத்தை பொலிவுடன் வைத்திருக்க இதன் மாவு பயன்படு கிறது. குளியல் சோப்புக்கு மாற்றாக இதை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.பச்சைப்பயறுவில் கோ 4, கோ 6, விபிஎன்1, பிஓய் 1 ஆகிய ரகங்கள் புரட்டாசி பட்டத்தில் விதைக்கப்படுகிறது.
இத்தானியத்தில் பாஸ்பாரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. பருப்பு தவிர எஞ்சிய பாகங்கள் பசுந்தாள் உரமாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது. மானாவாரியில் எக்டருக்கு, 600 - 750 கிலோவும், இறவையில் 1,000 - 1,200 கிலோவும் மகசூல் கிடைக்கிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில், தற்போது இதன் சாகுபடி பரப்பளவு, 40 - 50 எக்டராக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் பாசிப்பயறு மட்டுமல்லாது, பயறுவகைகளின் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைவுக்கு காரணம் என்ன?
பாசிப்பயறு விதைப்பு பொள்ளாச்சி வடக்கு, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதியில் குறைவாகவே நடக்கிறது. இதற்கு காரணம் சீதோஷ்ண நிலை தான். இப்பகுதியில் தட்டைப்பயறு சாகு படிக்கு ஏற்ற காலநிலை நிலவுவதால் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, தட்டைப்பயறு விளைச்சலில் மகசூல் அதிகமாக கிடைப்பதே இதற்கு காரணமாகும். மற்றபடி பாசிப்பயரில் மகசூலும் குறைவு தான் என விவசாயிகள் நம்புவதே, இப்பயறு விளைச்சல்பரப்பு குறைவாக உள்ளது. கோவை மாவட்டத்தில் அன்னுார், காரமடை பகுதிகளில் பாசிப்பயறு சாகுபடி அதிகம் என, பொள்ளாச்சி வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source : Dhinamalar
No comments:
Post a Comment