Tuesday, November 24, 2015

சீரகமும் சிறப்பும்


சீரகம் ஓர் ஒப்பற்ற நறுமணப் பண்டமாகும். கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பெருஞ்சீரகம் என்று பல்வேறு ரகங்கள் இதனில் உள்ளன. இவை தவிர, பிளப்புச் சீரகம் என்ற ஒரு ரகமும் உள்ளது என்கின்றனர். ஆயினும், போஜனத்திற்குரிய ரகம் சாதாரண சீரக விதைகளே ஆகும். இது அன்றாட சமையலறைப் பயன்பாட்டில் இன்றியமையாத சாதனமாகும். சமையலாகும் காய்கறிகளுக்கும், ரசத்திற்கும் சீரகம் இடவில்லை என்றால், நறுமணமும், நற்சுவையும் அமைவதில்லை. ஆதலால் இது போஜனகுடாரி என்று பாராட்டுப் பெற்றுள்ளது.
இது ஓராண்டுப் பயிராகும். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரம் வரை சீராக வளரக்கூடியது. அடர்ந்த கிளைகளுடனும், சிறிய இளமஞ்சள் நிற பூக்களுடனும் இது திகழ்கிறது. குஜராத்தின் ஊஞ்சா ரகத்தை அடுத்து, பாட்டான் ரகச் சீரகமும் ஆங்காங்கு நல்வரவு பெற்றுள்ளது. தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டம் முதலான சிற்சில பகுதிகளில் மட்டுமே சீரக விவசாயம் ஓரளவு இயங்கி வருகிறது. இதன் விளைச்சல் மிகக்குறைவாக இருப்பதாலேயே, வட இந்தியச் சீரக ரகங்கள் தமிழ்நாட்டில் அணிவகுக்கின்றன.
பித்த நோய்களுக்கெல்லாம் முதன்மையான மருந்தாகச் சீரகம் போற்றப்படுகிறது. சீரக பில்வாதி லேகியம் சீரகத் தைலம், சீரகச் சூரணம் ஆகிய நாட்டு மருந்துகள் பல்வேறு பிணிகளைத் தீர்க்கின்றன. சீரக எண்ணெய் தோல் வியாதிகள், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. இது நெஞ்சுப் புண்ணை ஆற்றும். மண்டைக் குத்தலை மாய்க்கும். வாந்தி, சுவையின்மை, குன்மம், வாய்நோய், ஈரல் நோய், இரைப்பு, இருமல், கல்லடைப்பு, தொண்டைக் கம்மல், தும்மல், அஜீரணம், வாயு, நாசி நோய் ஆகிய நோய்களை சீரகம் குணமாக்கும் என்று சித்த மருத்துவ நூல் சித்தரிக்கின்றது. மேலும் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்கிறது அது.
மிகவும் எளிதான வைத்திய வழி முறைகள் பலவும் உள்ளன. குடிதண்ணீரில் சீரகம் இட்டு அந்த நீரை அருந்தினால் உடல் காங்கை குறைந்து விடும். சீரக ரசம் ஊற்றிச் சாதம் சாப்பிடுவது மிகச்சிறந்தது. சாதம் வடித்த கஞ்சியில் சீரகத்தூள் + நெய்= கலவையைப் பருக இடுப்பு வலி இராது. வயிற்றில் வலியும் வாய்வு தொல்லையும் ஏற்பட்டால் வெந்நீரில் சீரகத்துளை இட்டுப் பருகலாம். உடம்பைச் சுத்திகரிக்கும் சக்தி இந்த நீருக்கு உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள உணவகங்களில் ஜீரா வெள்ளம் என்ற பெயரிலே சூடான சீரகத் தண்ணீர் உணவருந்துவோருக்கு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை தமிழக உணவகங்களிலும் ஏற்பட்டால் நலமாக இராதோ?
எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment