சேலம்: தமிழகத்தில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி உரம் வழங்குவதற்காக, நவம்பர் மாதத்தில் மட்டும், 4.16 லட்சம் டன் உரம் ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
98 சதவீதம்: தமிழகத்தில், கடந்த, 2013-14ல் வறட்சி நிலவிய நிலையில், விளை நிலங்களின் அளவு, 43.47 லட்சம் ஹெக்டேராக இருந்தது. கடந்த, 2014ல் தென் மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழையும் சேர்த்து, 812.30 மி.மீ., மழை பெய்தததால், விளை நிலங்களின் அளவு 46.10 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தது. நடப்பாண்டில், நவம்பர் கடைசி வாரம் வரை, 645 மி.மீ., மழை பெய்துள்ளதால், 89 அணைகள், 39 ஆயிரத்து, 202 பெரிய ஏரிகள், 13 ஆயிரத்து, 779 சிறிய ஏரிகள், நிரம்பி வருகின்றன. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருவதால், நடப்பாண்டில், 98 சதவீத நீர்நிலைகள் நிரம்ப வாய்ப்புள்ளது.
தட்டுப்பாடின்றி சப்ளை: நடப்பாண்டில், விளைநிலங்களின் பரப்பு, 55.02 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும் என, வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளை விட நடப்பாண்டு, விளை நிலங்களின் பரப்பு அதிகரிப்பதால், விவசாயத்துக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இன்றி சப்ளை செய்ய தேவையான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த, 2014-15 நிதியாண்டில், தமிழகத்துக்கு, 24.75 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 19.75 லட்சம் மெட்ரிக் டன் விநியோகிக்கப்பட்டதால், உரத்தட்டுப்பாடு ஏற்பட்டது. நடப்பாண்டில், உரத்தின் தேவை, 23.60 லட்சம் மெட்ரிக் டன் முதல், 30 லட்சம் மெட்ரிக் டன் வரை தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகிய உரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
உரம் இருப்பு: நவம்பர் மாதத்தில் மட்டும், தமிழகத்தில் உள்ள, 16 ரயில்வே கூட்ஷெட்டுக்களுக்கு, 4.16 லட்சம் மெட்ரிக் டன் உரம் வந்துள்ளது. சேலம் ரயில்வே கூட்ஷெட்டுக்கு, 26 ஆயிரம் டன் உரம் வந்துள்ளது. நவம்பர் மாதத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்த உரங்கள் போக, நவ.,28 வரை, வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியாரிடம், 25 லட்சம் மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. விவசாய பணிகள் விறுவிறுப் படைந்துள்ள நிலையில், மேலும், 10 லட்சம் மெட்ரிக் டன் உரங்களுக்கு, ஆந்திரா மாநிலத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதால், டிசம்பரில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் நவ.,25 கணக்கின்படி, 25 லட்சம் மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. விவசாய பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில், 20 லட்சம் மெட்ரிக் டன் உரம் விநியோகிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தட்டுப்பாடு இன்றி உரம் வழங்கும் வகையில், டிசம்பர் மாதத்தில், 10 லட்சம் மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் தமிழகத்தின், 16 ரயில்வே கூட்ஷெட்டுக்களுக்கும் வர உள்ளது. நடப்பாண்டில், உரத்தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment