உடுமலை: உடுமலை அமராவதி அணையிலிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
உடுமலை அமராவதி அணைக்கு, வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியதும், நீர் வரத்து அதிகரித்தது. பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால், நீர் மட்டம், வேகமாக உயர்ந்து, அணை நிரம்பும் நிலையை நோக்கி சென்றது.
இந்நிலையில், சம்பா பருவ நெல் சாகுபடி மற்றும் கரும்பு சாகுபடி பணிகளுக்காக, அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் கடந்த இரு வாரங்களாக தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அரசு உத்தரவு அடிப்படையில், நேற்று அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு கீழ் மட்ட ஷட்டர் வழியாக, வினாடிக்கு, 400 கன அடியாக ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு, பிரதான கால்வாயில், வினாடிக்கு, 350 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகா பகுதிகளில் அமைந்துள்ள பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, 10 நாட்கள் தண்ணீர் திறப்பு, 5 நாட்கள் அடைப்பு என்ற முறையில், மூன்று நனைப்புகளுக்கு, 2,592 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
புதிய ஆயக்கட்டிலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, 7 நாட்கள் திறப்பு; 5 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில், மூன்று நனைப்புகளுக்கு, 978.33 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்படும்.
நேற்றைய காலை நிலவரப்படி, அணையின் நீர் மட்டம், 90 அடியில், 88.27 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 724 கன அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 9 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சண்முகவேலு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கும், எம்.எல்.ஏ.,க்கள், நடராஜன் (காங்கேயம்), ராமலிங்கம்(ஈரோடு மேற்கு), பொன்னுசாமி (தாராபுரம்), புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விட்டனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment