உலகத்துக்கு அரபு உலகம் தந்த அரிய கொடை, பேரீச்சம்பழம். இது, சத்துகள் நிறைந்த ஒரு பெட்டகமாகவே திகழ்கிறது. குறிப்பாக, இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.
பேரீச்சம்பழத்தை அன்றாடம் சாப்பிடும்போது அது அள்ளித்தரும் நன்மைகள் பற்றிப் பார்ப்போம்...
பேரீச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் நிறைந்துள்ளன.
குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. அதனால் தினமும் பேரீச்சம்பழம் உட்கொண்டால் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.
பேரீச்சம்பழத்தில் இருக்கும் தாதுக்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கின்றன. எலும்பு தேய்மானம், எலும்பு சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் தினசரி பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.
பேரீச்சம்பழத்தில் செலினியம், தாமிரம் போன்ற சத்துகளும் இருக்கின்றன. இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகின்றன.
தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது, குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.
பேரீச்சம்பழத்தில் வைட்டமின் ஏ, பி போன்றவை அதிகம் உள்ளன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகின்றன, சுருக்கங்களைப் போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகின்றன.
பேரீச்சம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றன.
இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி 6 போன்றவை ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகின்றன. இதனால் ரத்தசோகை பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண முடியும்.
உலர்ந்த பேரீச்சம்பழங்கள் அப்படியே உண்ண ஏற்றவை. வாதாம்பருப்பு, பாதாம்பருப்பு, பாலாடைக்கட்டி ஆகியவற்றுடன் பேரீச்சையைச் சேர்த்து ஆவியில் வேகவைத்தும் சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சைத் துண்டுகளைச் சேர்த்தால் சுவை கூடும்.
பேரீச்சை ஜூஸ் உடலுக்கு நல்ல சக்தி அளிக்கக்கூடியது. பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து பேரீச்சைச் சாறு தயாரித்து சத்துபானமாக அருந்தலாம்.
சுவையோடு சத்து அளிக்கக்கூடிய உணவுப்பொருட்களில் பேரீச்சை முக்கியமானது. அதை நமது அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்!
No comments:
Post a Comment