Thursday, November 26, 2015

துவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்...


 தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு சுமார் 23,000 ஏக்கர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 180 ஏக்கர் பரப்பு விதைப் பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 தற்சமயம், துவரை பயிர் பூக்கும் தருவாயில் உள்ளதால், உடனடியாக விவசாயிகள், பூச்சி நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்கி நல்ல மகசூலைப் பெற, மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து தருமபுரி விதைச் சான்று உதவி இயக்குநர் எம்.ஆர்.அசோகன் கூறும் வழிமுறைகள்:
 
கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள், பூஞ்சான வித்துக்களை அழிக்கலாம். டிரைக்கோடெர்மா விரிடி 5 கிலோ, சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 5 கிலோவை 125 கிலோ, மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு ஹெக்டேர் பரப்புக்கு இடுதல் நோய், நூற்புழுவின் தாக்குதலைக் குறைக்க உதவும்.
 
டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்வது பயிரின் ஆரம்ப கட்டத்தில் மண் மூலம் பரவும் நோய் பாதிப்பைத் தவிர்க்க உதவும்.
 
நூற்புழு தென்படும் இடங்களில் 1:1 என்ற விகிதத்தில் சோளத்தை ஊடுபயிராக விதைப்பது சிறந்த பலனைத்தரும். நோய், பூச்சித் தாக்குதலை எதிர்க்கும் ரகங்களை பயிர்செய்வது சிறந்தது. துவரையில் காய்ப்புழுவின் பாதிப்பைக் கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். இனக் கவர்ச்சிப் பொறியை ஹெக்டேருக்கு 55-10 வரை வைப்பதன் மூலம் ஆண் தத்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.
 
ஒரு நாளில் 4-5 தாய் அந்துப் பூச்சிகள் இனக் கவர்ச்சிப் பொறியில் விழுந்தால் மேலாண்மை முறைகளைக் கையாள்வது அவசியமாகும்.
 
மலட்டு தேமல் நோய் பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மலட்டு தேமல் நோய் செம்பேனால் பரவுவதால் செம்பேனைக் கட்டுப்படுத்த புரோபர்கைட் 1.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது ஸ்பைரோசிரொன் 0.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது அவர்மெக்டின் ஒரு மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.
 
பச்சைப் புழு, புள்ளிக்காய்ப்
 
புழுவின் பாதிப்பு அதிகமானால் ஹெக்கோவெர்பா என்.பி.வி 450 எல்இ என்ற அளவிலும் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் தெளிக்கலாம்.
 
பூச்சி மருந்துகளை உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படின், இண்டாக்சாகார்ப் 1 மி,லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது ப்ளுபென்டமைடு 0.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது ஸ்பைனோசேட் ஒரு மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது குளோர்நைட்ரோப்ரோனோல் 0.3 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது எமாமெக்டின் பென்ஜோவேட் 0.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம். சாறு உறிஞ்சும் பூச்சிகள் பயிரின் ஆரம்ப காலத்தில் வளர்ச்சியைப் பாதிக்கும். இதைத் தவிர்க்க, மஞ்சள் ஒட்டுப் பொறி அல்லது மஞ்சள் வண்ண அட்டைகள் 25- ஒரு ஹெக்டேருக்கு வைப்பது சிறந்த பலனைத் தரும். பாதிப்பு அதிகமானால், வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது இமிடாகுளோபிரிட் 0.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு, தயோமீத்தாக்சம் 0.5 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு, தயோகுளோபிரிட் ஒரு மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு, இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.
 
வாடல் நோய், வேர் அழுகலைத் தவிர்க்க விவசாயிகள் சூடோமோனஸ்,டிரைக்கோடெர்மாவை உபயோகப்படுத்தலாம். பாதிப்பு அதிகமானால், தயோபினைட் மீதைல் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, அல்லது கார்பண்டாசிம் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைட் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் உபயோகிக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், விவசாயிகள் நல்ல மகசூலைப் பெற்று பயனடையலாம் என்றார்.
"
துவரையில் காய்ப்புழுவின் பாதிப்பைக் கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். இனக் கவர்ச்சிப் பொறியை ஹெக்டேருக்கு 55-10 வரை வைப்பதன் மூலம் ஆண் தத்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்."

No comments:

Post a Comment