புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று தினங்கள்
கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரைக்கு யாரும் வரவேண்டாம் என, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டனர்.வட
கிழக்கு பருவமழை கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி, தமிழகம், புதுச்சேரி பகுதியில் பல
இடங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த
தாழ்வு நிலை வலுவடைந்து உள்ளதால், இன்று (28 ம் தேதி) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை
பெய்யும் என்றும், 12 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம்
எச்சரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
இதையொட்டி நேற்று முன் தினம் இரவு, அனைத்து
துறை அதிகாரிகளுடன் மழை முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மணிகண்டன் ஆலோசனை நடத்தினார்.
ஏற்கனவே பெய்த மழையால், சங்கராபரணி மற்றும் தென் பெண்ணையாற்றில், நீர் வரத்து அதிகமாக
உள்ளது. வீடூர் மற்றும் சாத்தனுார் அணைகளில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும் மழை தொடரும் என வானிலை அறிவித்துள்ளதால்,
புதுச்சேரியில் தாழ்வான மற்றும் நீர்நிலை ஓரங்களில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக
இருக்க வேண்டும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.
தயார் நிலை
புதுச்சேரி அரசு துறைகளில் பணி புரிபவர்கள்
24 மணி நேரமும் தயாராக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு,
காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை எண் 101, அவசர ஊர்தி
கட்டுப்பாட்டு அறை எண் 108 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
மூன்று நாட்களுக்கு கடும் மழை பெய்யும்
என்பதால், தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடற்கரை பகுதியில்
சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என நேற்று காலை முதல் ஒலிபெருக்கி மூலம், நகராட்சி சார்பில்
எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதச்சேரியில் கடந்த 6ம் தேதி முதல்
75 செ.மீ., மழை பெய்து ஏரிகள், அணைகள் நிரம்பி வருகின்றன. அனைத்து மக்களும் பாதித்த
நிலையில், மீண்டும் மூன்று நாள் மழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment