Tuesday, November 24, 2015

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெறலாம் மாவட்ட நிர்வாகம் தகவல்


முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிதொழிலாளர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

உழவர் பாதுகாப்பு திட்டம்

தமிழக முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள், விவசாயக் கூலி குடும்பங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, விபத்து மரண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகை ஆகியவை அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் புற்றுநோய், காசநோய், சிறுநீரகக் கோளாறு, இருதய நோய், எயிட்ஸ், எச்..வி. போன்ற ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் காலங்களில் அரசு மருத்துவர் (அல்லது) அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சான்றின்படி மாதம் ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

பதிவு செய்யலாம்

இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர 5 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கு மேற்படாமலும், 2.50 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு மேற்படாமலும் உள்ள விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் தகுதி உடையவர்கள் ஆவார்கள். இந்த திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள் இருக்கவேண்டும். இந்த திட்டத்தில் பயனாளியாக சேர ரேஷன் கார்டு அவசியம் இருத்தல் வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களான தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, கோழிப்பண்ணைத் தொழில், பால் பண்ணைத் தொழில், கால்நடை வளர்¢ப்பு போன்ற தொழில்கள் செய்வோரும் இந்த திட்டத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

மூல உறுப்பினர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் இந்த திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படுவார்¢கள். குறிப்பிட்ட தகுதிகளை உடைய விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர்¢கள், விவசாயம் சார்ந்த கூலித்தொழிலாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை அணுகி முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து பலன் அடையலாம் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment