'வத்தல் மலையில், மண் சரிவு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், கற்றாழை போன்ற தாவரங்களை நட வேண்டும்' என, பெரியார் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
பெரியார் பல்கலைக்கழக பேராசிரியரும், புவித் தகவலமைவு மையத்தின் இயக்குனருமான, அன்பழகன் தலைமையில், வத்தல் மலையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது: வத்தல்மலையில் அதிகமாக உருமாறிய மண் வகை, நீரின் அடர்த்தி பெருக்கம், மண் அரிப்பு, பாறைகளின் சுமை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, மண் சரிவு ஏற்பட மிகப்பெரிய காரணமாகும். வத்தல் மலையில் மண் சரிவு ஏற்படுவதற்கு, மண்ணின் தன்மை, புவிப்பொறியியல் காரணிகள், சரிவை தடுக்கும் முறைகள் தொடர்பான நீண்டகால ஆராய்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேற்பரப்பு நீர், ஓடை நீர் மண்ணுக்குள் புகா வண்ணம் வடிகால் அமைக்க முடியுமானால், மண் சரிவை ஓரளவுக்கு தடுக்கலாம். மண் அரிப்பைத் தடுப்பதற்கு உடனடித் தேவையாக, கற்றாழை போன்ற தாவரங்களை மலைப் பாதையின் இருமருங்கிலும் பல அடி தொலைவுக்கு மேல் நடலாம். நீண்ட கால நடவடிக்கையாக, வேர்ப் பிடிப்பு உள்ள சிறிய வகை மரங்களை நடலாம். தடுப்புச் சுவர்கள் நீர் வடிகால் வடிவமைப்புடன் அமைப்பது சிறந்த முறையாகும். புவிப்பொறியியல் காரணிகளை, நன்கு ஆராய்ந்த பிறகு, மேலும் தீர்க்கமான தடுப்புத் திட்டங்களை வகுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment