Friday, November 27, 2015

கொடைக்கானல், ஊட்டியை போல சுற்றுலா தலமாகிறது: சிறுமலையில் 20 ஏக்கரில் பிரமாண்ட பூங்கா


திண்டுக்கல்
கொடைக்கானல், ஊட்டியை போல சிறுமலையையும் சிறந்த சுற்றுலா தலமாக்க அங்கு ரூ.5½ கோடியில் 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பூங்காவை அமைக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
‘குட்டி கொடைக்கானல்’
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அங்கு வீசும் குளிர்ந்த காற்றுக்கும், கமழும் மூலிகை மணத்துக்கும் ஈடு இணை எதுவும் இல்லை என்றே சொல்லலாம். அதை ‘குட்டி கொடைக்கானல்’ என்றும் செல்லமாக அழைக்கிறார்கள்.
18 கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும்போதுதான் எத்தனை உற்சாகம்; எத்தனை மகிழ்ச்சி. மலை உச்சியில் கண்ணுக்கு விருந்தளிக்கும் விண்ணை முட்டும் மரங்கள், பசுஞ்சோலைகள், மணம் வீசும் பூக்கள் என சிறுமலையின் அழகை வர்ணித்துக்கொண்டே செல்லலாம். இயற்கை கொட்டி கிடக்கும் சிறுமலை எப்போது சுற்றுலா தலமாக மாறும்? என்பது பலரின் ஏக்கமாக இருந்து வருகிறது. கொடைக்கானலை போல சிறுமலையிலும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும் என பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
பிரமாண்ட பூங்கா
இதன் எதிரொலியாக சிறுமலையில் திண்டுக்கல் தோட்டக்கலைத்துறை சார்பில் பிரமாண்ட பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமலை அகஸ்தியர்புரத்தை கடந்து தென்மலை செல்லும் வழியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது. 510 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த பண்ணையின் ஒரு பகுதியில் 20 ஏக்கரில் 15 பொழுது போக்கு அம்சங்கள் அடங்கிய கண்கவர் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.5½ கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராமநாதன் கூறியதாவது:–
கொடைக்கானல், ஊட்டியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல சிறுமலையையும் சிறந்த சுற்றுலா தலமாக்க திண்டுக்கல் தோட்டக்கலைத்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரூ.5½ கோடியில் பிரமாண்ட பூங்கா அமைக்க அனுமதி கேட்டு அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி உள்ளோம்.
அதன்படி சிறுமலையில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் 20 ஏக்கர் பரப்பில் குழந்தைகள் தோட்டம், வண்ணத்துப்பூச்சி தோட்டம், சிறுமலை வாழை தோட்டம், மூலிகை தோட்டம், கண்களை கொள்ளை கொள்ளும் செயற்கை நீர்வீழ்ச்சிகள், வண்ண விளக்குகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் அந்த பூங்காவை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.ஒரு ஆண்டாக காத்திருக்கிறது.
சுற்றுலா துறையின் ரூ.6 கோடி திட்டம்
திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா துறையும் சிறுமலையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.6 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சிறுமலையை சிறந்த சுற்றுலா தலமாக்க அங்கு சுற்றுச்சூழல் பூங்கா, சிறுவர் பூங்கா, வண்ண விளக்குகள் அமைப்பது, ரோடு வசதியை மேம்படுத்துவது, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே காட்சி கோபுரங்கள் அமைப்பது என ரூ.6 கோடியில் கடந்த ஆண்டு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் பணிகள் நிறைவேற்றப்படும்’ என்றார்.
இந்த திட்டத்துக்கு விரைவில் அரசு அனுமதி கொடுத்து, பணிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருக்கிறது.
  

No comments:

Post a Comment