பொள்ளாச்சி: பெரும்பதி கிராமத்தில் செயல்பட்ட உழவர் மன்றம், 'நபார்டு' உதவியால் 'பசுமை உற்பத்தியாளர் அமைப்பு' என, உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சி வடக்கு, பெரும்பதி கிராமத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் ஒருங்கிணைப்பில், சில ஆண்டுகளுக்கு முன், 'உழவர் மன்றம்' துவங்கியது. மன்றத்தின் செயல்பாடுகள், விவசாயக் குழுக்களின் சேர்க்கையால், 'உழவர் கூட்டமைப்பு' ஆக உருவெடுத்தது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் வழங்கிய சலுகைகள், புதிய தொழில்நுட்பங்கள், இடுபொருட்கள், பசுந்தாள் உரங்கள், இவற்றுக்கான மானியங்கள், விவசாயிகளுக்கு கிடைத்தன.
நடப்பாண்டு, கோவை மாவட்டத்தில், இரண்டு உழவர் கூட்டமைப்புகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது; அதில் ஒன்று, பெரும்பதி உழவர் கூட்டமைப்பு; தற்போது, 'பசுமை உழவர் உற்பத்தியாளர் அமைப்பு' ஆக உயர்ந்துள்ளது. இதன் துவக்க விழா, வாணவராயர் வேளாண் கல்லுாரி மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) சார்பில், பெரும்பதி கிராமத்தில், நேற்று நடந்தது. தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின், துணை பொதுமேலாளர் இனிகோ அருள்செல்வன், வாணவராயர் வேளாண் கல்வி நிறுவன இயக்குனர் கெம்புசெட்டி தலைமை வகித்தனர். தமிழக வேளாண் பொறியியல் துறை உதவிபொறியாளர் விஜயகுமார், வாணவராயர் கல்வி நிறுவன உதவி பேராசிரியர் காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைப்பின் தலைவராக, திருவேங்கடம், செயலாளராக ரத்தினசாமி, பொருளாளராக சிவகுமார், 10 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அமைப்பில், பெரும்பதி, சொக்கனுார், முத்துக்கவுண்டனுார், குமிட்டிபதி, ஜமீன்காளியாபுரம், கக்கடவு, காணியாலாம்பாளையம் கிராம விவசாயிகள், 50க்கும் மேற்பட்டோர், உறுப்பினர்களாக உள்ளனர்.அமைப்பின் தலைவர் திருவேங்கடம் கூறுகையில், ''வரும் மூன்று ஆண்டுகளுக்கு, அமைப்பின் விவசாய வளர்ச்சிக்கு, 10 லட்சம் நிதியுதவி கிடைக்கவுள்ளது. இதைக் கொண்டு, விவசாய விளைப்பொருட்களை மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றுதல், தாவர எண்ணெய், தக்காளி ஜாம் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி லாபம் ஈட்டும் பணிகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி, கிராம முன்னேற்றத்துக்கும் உதவும்,'' என்றார்.
No comments:
Post a Comment