சென்னை,
மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
அந்த காற்றழுத்த தாழ்வுநிலை, நேற்று முன்தினம் குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொண்டது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனேக இடங்களில் மழை பெய்யும்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரிக்கடல் பகுதியில் நேற்று (நேற்று முன்தினம்) நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, இன்று(நேற்று) காலை 8.30 மணி நிலவரப்படி, மேற்கு நோக்கி நகர்ந்து, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்கள் என்பது நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய இடங்களாக இருக்கலாம் என்று ‘கம்ப்யூட்டர்’ கணிப்புப்படி தெரிகிறது.
மழை அளவு
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று (நேற்று) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
மயிலாடுதுறை 20 செ.மீ., காரைக்கால் 19 செ.மீ., பாபநாசம் 15 செ.மீ., கடலூர், விழுப்புரம், செய்யூர், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 14 செ.மீ., பரங்கிப்பேட்டை 13 செ.மீ., கொடவாசல் 12 செ.மீ., பண்ருட்டி, மணியாச்சி, சீர்காழி, அணைக்காரன்சத்திரம், விருதாசலம், ஜெயம்கொண்டம், தொழுதூர் ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ., நாகப்பட்டினம், திருவாரூர், உத்திரமேரூர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., பாண்டிச்சேரி, கே.எம்.கோவில், அரக்கோணம், சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment