Monday, November 2, 2015

ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோயை தடுப்பது குறித்த பயிலரங்கம்


ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோயைத் தடுக்கும் முறைகளை மேம்படுத்துவது தொடர்பான 5 நாள் பயிலரங்கம் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது.
 
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தொடக்கி வைத்தார்.
 
இந்தப் பயிலரங்கு குறித்து கால்நடை நலக்கல்வி மைய இயக்குநர் பி..கணேசன் கூறியதாவது:
 
ஆடுகளைத் தாக்கும் நீலநாக்கு நோய் தாக்கம் தென் மாநிலங்களிலேயே அதிகம் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து இந்த நோய்த் தாக்கத்துக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து, நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த தடுப்பூசி பயன்பாடு காரணமாக, நோய் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது.
 
இந்தியாவைப் பொருத்தவரை 26 வகையான வைரஸ்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது. தமிழகத்தில் 5 வகையான வைரஸ்களால் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கான ஒரே தடுப்பூசியை உருவாக்கினோம்.
 
இந்த நோய் தடுப்பு முறைகளை மேலும் மேம்படுத்தும் வகையிலும், நோய் கண்காணிப்பு முறைகளை மேம்படுத்தும் வகையிலுமே இந்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது.
 
இந்த நோய் தாக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக கிராமப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, தடுப்பூசிகளை அரசு இலவசமாக அளிக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்தக் கோரிக்கை குறித்து பயிலரங்கு தொடக்க விழாவில் பங்கேற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக உதவி பொது இயக்குநர் கயா பிரசாத்திடம் எடுத்துரைக்கப்பட்டது என்றார் அவர்.


http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/11/03/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3111161.ece

No comments:

Post a Comment