Friday, November 20, 2015

தொடர் மழை : நெற்பயிர்களில் நோய் தாக்குதல்


தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் சம்பா பருவ நெல் பயிர்களில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

மாவட்டத்தில் 1,38,500 ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டது. இதில், சம்பா பருவத்தில் 92,648 ஹெக்டேரிலும், தாளடி பருவத்தில் 25,955 ஹெக்டேரிலும் என மொத்தம் 1,18,603 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டது.
அண்மையில் பெய்த தொடர் மழையால் கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டாரங்களில் 392 ஹெக்டேரில் பயிர்கள் மூழ்கின.
கடந்த திங்கள்கிழமை முதல் மழை இல்லாததால் 8 ஹெக்டேரை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டது. மேலும், பாதிப்பு விவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. நீரில் மூழ்கிய பயிர்களுக்கு சிங் சல்பேட், யூரியா உரங்கள் இட்டால், பயிர்கள் மீண்டும் புத்துயிர் பெறும் என்றும், சிங் சல்பேட் 50 சத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன எனவும் வேளாண் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் அருகேயுள்ள ஆலக்குடி, கண்டிதம்பேட்டை, கள்ளப்பெரம்பூர் ஆகிய பகுதிகளில் சம்பா பயிரிடப்பட்டுள்ள 178 ஹெக்டேரில் இலைக்கருகல் நோய் காணப்படுகிறது. இதனால், நெற் கதிரில் இலைகள் கருகி வருகின்றன. இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் இரா. ஞானஒளி தெரிவித்தது:
தொடர் மழையால் நெல் பயிரில் இலைக்கருகல் நோய் தென்பட வாய்ப்புள்ளது. எனவே, 40 கிலோ புதிதாக இட்ட பசுஞ்சாணத்தையும், 2 கிலோ சூடோமோனாஸ் புளூரசன்னஸ்சும் 50 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் வடிகட்ட வேண்டும். பின்னர், வடிகட்டிய நீரை தண்ணீர் கலந்து 200 லிட்டராக்கி ஒரு ஏக்கரில் தெளிக்க வேண்டும். அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு தெளிக்க வேண்டும் என்றார் ஞானஒளி.'

http://www.dinamani.com/edition_trichy/tanjore/2015/11/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88--%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B/article3137568.ece



No comments:

Post a Comment