Tuesday, November 24, 2015

கடல் நீரிலிருக்கும் உப்பை பிரித்தெடுக்கும் ‘நானோ துளைகள்’


ருங்காலத்தில் குடிதண்ணீருக்காக யுத்தமே நடக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் அதன் விளைவாக ஏற்படக்கூடிய வறட்சி, உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளை தவிர்க்க போதுமான அளவுக்கு குடிநீரை உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக விஞ்ஞானிகள் குடிநீர் உற்பத்தி தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் கடல் நீரிலிருக்கும் உப்பை நீக்கி அதனை குடிநீராய் மாற்றுவது

கேட்பதற்கு மிகவும் சுலபமானது போலத் தோன்றும் இந்த முயற்சி ஒன்றும் புதிதல்ல. பல வருடங்களாக வெவ்வேறு தொழில்நுட்ப முறைகள் மூலமாக முயற்சிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முழுமையான வெற்றி அடையாமல் இருக்கும் ஒரு நீண்டகால முயற்சி இது.

ஆனால் தற்போது அதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவிலுள்ள இலினாய் பல் கலைக்கழகத்தின் எந்திர அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் நாராயண அலுறு தலைமையிலான ஆய்வுக்குழுவினர் கடல் நீரிலிருக்கும் சுமார் 70 சதவீதம் உப்பை நீக்கும் திறனுள்ளநானோபோர்எனும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

மாலிப்டினம் டைசல்பைடுஎனும் வேதியல் பொருளால் ஆனது இது. ஒரு நானோ மீட்டர் (அதாவது ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) தடிமனுள்ள மற்றும் நானோ அளவிலான பல துளைகள் கொண்ட தாள் போன்ற அமைப்பில் இது இருக்கும். இந்த புதிய கடல்நீர் சுத்திகரிப்பு கருவியானது கடல் நீரிலுள்ள உப்பு மட்டுமல்லாமல் பிற ரசாயனங்களையும் நீக்குகிறது. கடல்நீர் சுத்திகரிப்பைப் பொருத்தவரை உப்பை நீக்கும் ஒரு கருவியை கண்டு பிடித்துவிட்டால் மட்டும் போதாது. மாறாக, உப்பை வெற்றிகரமாக நீக்கும் அதேசமயம் குறைந்த விலையில் இயக்கக்கூடிய மற்றும் ஒரே சமயத்தில் அதிகப்படியான கடல்நீரை சுத்திகரிக்கக்கூடிய திறனுள்ள ஒரு கருவியை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என்கிறார் பேராசிரியர் அலுறு. இதுவரை ஒரு சக்தி வாய்ந்த கடல்நீர் சுத்திகரிப்பு கருவி கண்டுபிடிக்கப் படாததற்கும் இதுவே காரணம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மிக மிக மெல்லிய மாலிப்டினம் சல்பைடு தாள் கொண்ட இந்த புதிய கருவியில் உள்ளமாலிப்டினம்தண்ணீரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. ஆனால், இதிலுள்ள மற்றொரு பொருளான சல்பரோ தண்ணீரை வெளியே தள்ளும் குணம் கொண்டது. ஆக, இந்த கருவியில் இருக்கும் ஒரு வேதியியல் பொருள் இயற்கையாகவே தண்ணீரை தள்ள, அதே சமயம் மற்றொன்று கவர்ந்து இழுக்க, ஆற்றல் செலவு எதுவும் இல்லாமல் இயற்கையாகவே அதிகப்படியான தண்ணீர் கருவியினுள் இழுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறதுஎன்கிறார் குழுவின் மற்றொரு ஆய்வாளரான முஹம்மது ஹெய்ரானியன்.

தற்போது இந்த கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வர உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.
  

No comments:

Post a Comment